வீரகட்டிய மோதல் – 7 பேர் விளக்கமறியலில்

120 0

வீரகட்டிய, அந்தனயால பிரதேசத்தில் நேற்று (06) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 07 சந்தேக நபர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (07) பிற்பகல் இந்த உத்தரவு வழங்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வீரகட்டிய, அந்தனயால பிரதேசத்தில் பொலிஸாருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

குற்றங்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் நீதிமன்றில் பெறப்பட்ட பிடியாணையை நிறைவேற்றுவதற்காக வீரகட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று நேற்று பிற்பகல் சிவில் உடையில் அத்தனயால பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.

எவ்வாறாயினும், அந்த நடவடிக்கையின் பின்னர், திரும்பி வந்து கொண்டிருந்த சிவில் உடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு, வீதியில் காத்திருந்த இளைஞர்கள் குழுவை விசாரித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

மோதலில் காயமடைந்த 07 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் தற்போது தங்காலை அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மோதலின் போது, ​​வீரகட்டிய பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் காதுகளை பொதுமக்கள் கடித்ததாகவும் ஒரு காது துண்டிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய, குறித்த உப பொலிஸ் பரிசோதகர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.