பாகிஸ்தானில் போலீஸார் சென்ற டிரக் மீது இருசக்கர வாகனத்தை மோதி தற்கொலை படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 9 அதிகாரிகள் உயிரிழந்தனர். 16 பேர் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டாவில் இருந்து தென்கிழக்குப் பகுதியில் 120 கி.மீ. தொலைவில் உள்ளது கச்சி மாவட்டம். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரமான தாதர் பகுதியில் நேற்று போலீஸ் அதிகாரிகள்டிரக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது டிரக்கின் பின்னால் இருசக்கர வாகனத்தை மோதி தற்கொலைப் படை தீவிரவாதி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்து கச்சி மாவட்ட போலீஸ் தலைவர் மெகமூத் நோட்ஸாய் கூறியதாவது: பலுசிஸ்தான் மாகாணத்தில் ஆண்டுதோறும் கால்நடைகள் கண்காட்சி ஒரு வாரம் நடை பெறும். இந்த ஆண்டு கண்காட்சிக்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பலுசிஸ்தான் காவல்படை அதிகாரிகள், கான்ஸ்டபிள்கள் பணி முடிந்து டிரக்கில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் டிரக் பின்னால் பைக்கை மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 9 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர். 16 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிபி மாவட்ட மருத் துவமனையில் தீவிர சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அவர்களில் சிலருடைய உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு கச்சி மாவட்ட போலீஸ் தலைவர் மெகமூத் நோட்ஸாய் கூறினார்.
தற்கொலை படை தாக்குதல் நடைபெற்ற இடம், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளகைபர் பக்துன்கவா பகுதியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.