சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட தமிழீழத்தின் முன்னணிக் கலைஞரான மாமனிதர் எஸ். ஜி சாந்தன் அவர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு

417 0

தனது தனித்துவக் குரலால் தமிழ்த்தேசியத்திற்கு வலுச்சேர்த்த தமிழீழத்தின் முன்னணிக் கலைஞரான மாமனிதர் எஸ். ஜி சாந்தன் அவர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது பேர்ண் மாநிலத்தில் 28.02.2017 செவ்வாய்க்கிழமை அன்று உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் கனத்த இதயங்களுடன் கலந்து கொண்டிருந்தனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடியினைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அகவணக்கத்தினைத் தொடர்ந்து மக்களால் சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் சூரியத்தேவனின் வேருகளே மலர்வணக்கப்பாடலைத் தொடர்ந்து கலைஞர்களால் கரோக்கே முறையில் மாமனிதர் எஸ். ஜி சாந்தன் அவர்களின் குரலில் வெளிவந்த எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டன.

அரங்கம் நிறைந்து நூற்றுக்கணக்கான் தமிழ்மக்கள் கலந்து கொண்ட இவ்வணக்க நிகழ்வில் மாமனிதர் எஸ். ஜி சாந்தன் அவர்கள் பற்றிய நினைவுப்பகிர்வுகளை அவரின் தோளோடு தோள் நின்று பழகிய கலைஞர்கள், போராளிகள், இனஉணர்வாளர்கள் பகிர்ந்து கொண்டதோடு கவிவணக்கங்களும் இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த மீண்டும் 06.03.2017 அன்று ஐ.நா நோக்கி அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க ஆயத்தமாகுமாறு அனைத்து தமிழ் உறவுகளையும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உரிமையோடு இத்தருணத்தில் வேண்டி நிற்கின்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு