முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் 2 லட்சம் மருத்துவர்கள் பங்கேற்பு

111 0

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் 2 லட்சம் மருத்துவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் வரும் 31-ம் தேதி வெளியாகின்றன.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள மருத்துவப் பட்ட மேற்படிப்புகளான எம்.டி., எம்.எஸ். மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் இடங்கள் உள்ளன. நாடு முழுவதும் 42,500 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட்) அடிப்படையில் இந்த இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் (என்டிஏ) நடத்துகிறது. இந்நிலையில், 2023-24 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் 277 நகரங்களில், 900-க்கும்மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உள்ளிட்ட மையங்களில், காலை 9 முதல் பகல் 12.30 மணி வரை ஆன்லைனில் நடைபெற்றது.

தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த 25 ஆயிரம் பேர் உட்பட, நாடு முழுவதும் 2.09 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர்.

பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான சோதனைக்குப் பின்னரே மையங்களுக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். கேமராக்கள் மூலம் தேர்வு முழுமையாக கண்காணிக்கப்பட்டது. தேர்வு முடிவுகள் வரும் 31-ம் தேதி https://nbe.edu.in/, https://www.natboard.edu.in/ ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட உள்ளன. அதன்பின்னர் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகிறது.

நீட் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான நீட் தகுதித் தேர்வு தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் மே 7-ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவுமார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் என்று என்டிஏ அறிவித்திருந்தது.

அதன்படி, நீட் விண்ணப்பப் பதிவு இன்று (மார்ச் 6) முதல்தொடங்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை என்டிஏஇன்று காலை வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாணவர்கள், பெற்றோர் இந்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை /nta.ac.in//neet.nta.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.