நாட்டின் பல பிரதேசங்களில் போலி சாரதி அனுமதிப் பத்திரங்கள் புழக்கத்தில் இருந்து வரும் நிலையில், மினுவாங்கொடை பகுதியிலும் இத்தகைய போலி சாரதி அனுமதிப் பத்திரங்கள் தயாரிப்பு நிலையமொன்று, மினுவாங்கொடை பொலிஸாரினால் முற்றுகை இடப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்தே, இந்தப் போலி ஆவண நிலையம் சுற்றி வளைக்கப்பட்டதாக, மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
போலி சாரதி ஆவணங்களைப் பயன்படுத்துவோரைக் கைது செய்ய திடீர் பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், இதனைப் பயன்படுத்தி வாகனம் செலுத்துவோரை வளைத்துப்பிடிக்கும் நடவடிக்கைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில், விரிவான விசாரணைகள் தற்போது பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், போலி சாரதி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுப்போர், பல்வேறு இடங்களிலும் நடமாடித் திரிவதால், இது விடயத்திலும் எந்நேரமும் மிக அவதானமாகவும் விழிப்புடனும் செயற்படுமாறும், இதனை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொலிஸார் பொது மக்களையும் வாகனச் சாரதிகளையும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.