அரசியலமைப்பு, தேர்தல் சட்டம், சுயாதீன ஆணைக்குழுக்கள், நீதிமன்ற உத்தரவு, வாக்குரிமையை எதிர்பார்க்கும் அரசியல் கட்சிகள், அவர்களின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என அனைத்தையும் உச்சி விளையாடுவது எது?
மூக்குள்ளவரை சளி போகாதென்ற தென்னாலிராமன் கதைபோல, உள்ளூராட்சி சபைத் தேர்தல் சமாசாரம் இழுபட்டுக்கொண்டே போகிறது.
ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத்தேர்தல் ஆகியவற்றுக்கு இல்லாத முக்கியத்துவம் இன்று உள்;ராட்சி சபைத்தேர்தல்களுக்கு கிடைத்ததற்குக் காரணம், இதனை எப்பாடுபட்டாவது தடுத்துவிட வேண்டுமென்று ரணிலின் அரச இயந்திரம் துடியாய் துடித்துக் கொண்டிருப்பதுதான்.
முன்னர் கிராமசபைகள், பட்டினசபைகள், நகரசபைகள், மாநகர சபைகள் என்று தனித்தனியாக இடம்பெற்ற உள்;ர் நிர்வாக அலகுக்கான தேர்தல்கள், தற்போது உள்;ராட்சிச் சபைகள் என்ற பெரிய குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இற்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர்வரை மாநகர சபைக்கான தேர்தல்கள் தவிர, மிகுதிச் சபைகளின் தேர்தல்கள் உள்;ர் மட்டத்திலேயே நடைபெற்று முடிந்துவிடும். கட்சிகளின் தலைவர்களை தேர்தல் விடயங்களில் காணவே முடியாது. அந்தந்த பகுதி எம்.பி.மார் சிலர் தங்களின் எதிர்கால நலன்கருதி, இச்சபைகளை தங்களின் ஆதரவாளர்கள் கைப்பற்ற வேண்டுமென அக்கறை காட்டுவதுண்டு.
வடமாகாணத்தின் சபைகள் முழுமையாக (வன்னிப் பிராந்தியம் தவிர) தமிழரசு மற்றும் தமிழ் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் வந்துவிடும். சோலைவரி அறவிடுவது, வீதிகள் திருத்துவது, மின்விளக்குகள் பொருத்துவது, சந்தைகளை நிர்வகிப்பது ஆகியவற்றுடன் சைக்கிள்கள், வண்டில்கள் போன்றவைகளுக்கு நம்பர் பிளேற் வழங்குவது இச்சபைகளின் பிரதான பணி. சைக்கிள்கள், வண்டில்களில் பொருத்தப்பட்டிருக்கும் நம்பர் பிளேட்டின் நிறத்தைக் கொண்டு அந்த சபை எந்தக் கட்சியின் நிர்வாகத்திலுள்ளது என்பதை கண்டுபிடிக்கலாம்.
தமிழரசுக் கட்சியின் நிர்வாகத்திலிருந்தால் பச்சை, மஞ்சள், சிவப்பு மூவர்ணத்தில் நம்பர் பிளேற் இருக்கும். தமிழ் காங்கிரஸ் நிர்வாகத்திலிருந்தால் மூவர்ணத்துடன் மேலதிகமாக வெள்ளை நிறமும் அதில் சேர்ந்திருக்கும். கிழக்கு மாகாணம் மூவின மக்களும் சேர்ந்ததால் இங்கு வடக்குப்போல் அமைவதில்லை.
அந்தக் காலத்தில் இச்சபைகளின் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் சம்பளம் கிடையாது. வீதி திருத்தம், சந்தை நிர்வாகம் போன்ற ஒப்பந்தங்களில் ஏதாவது ஷகிம்பளம்| கிடைக்குமாறு பார்த்துக் கொள்வர். ஆனால் இன்று இது தலைகீழாக மாறிவிட்டது. உள்;ராட்சித் தேர்தல்கள் குட்டிப் பொதுத்தேர்தலாக அரசியல் கட்சிகளால் மாற்றப்பட்டுவிட்டது. இதனைவிட சுய இச்சை (சுயேட்சை) குழுக்கள் எக்கச்சக்கம். வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் வித்தியாசம் தெரியாதளவுக்கு பெரும் தடுமாற்றம்.
340 சபைகளுக்கும் 8,325 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 87,000 வரையான வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதனை கணக்குப் பார்த்தால் ஒரு உறுப்பினரைத் தெரிவு செய்வதற்கு இருபத்தைந்துக்கும் அதிகமானோர் போட்டியிடுகின்றனர். நாற்பதுக்கும் அதிகமான அரசியல் கட்சிகள் போட்டியில். அதனைவிட பலமடங்கு அதிகமான சுயேட்சைகள். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் பல குழுக்களைக் களத்தில் இறக்கியுள்ளனர்.
தமிழரின் கலாசார தலைநகர் எனவும், தமிழர் அரசியலின் முடிவுகளைத் தீர்மானிக்கும் களம் எனவும் அவ்வப்போது அறிவிக்கப்படும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதினைந்து அரசியல் கட்சிகளும் பதினாறு சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இலங்கையின் இருபத்தைந்து தேர்தல் மாவட்டங்களில் இங்கு மட்டும்தான் சிங்கள – தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் மோதுகின்றன என்பது வரலாற்றுப் பதிவு.
தமிழர் தாயகத்தைப் பொறுத்தளவில், தங்கள் கட்சியின் தலைமைப் பதவியை கைப்பற்றவும், அடுத்த பொதுத்தேர்தலில் இலகுவாக வெற்றி பெறவும் இலக்கு வைத்து வேட்பாளர்கள் மோதவிடப்பட்டுள்ளனர் சில குட்டித் தலைவர்களால்.
முக்கியமாக பிளவுபட்ட தமிழர் தேசிய கூட்டமைப்பு எதிரும் புதிருமாக மோதுகின்றது. தேர்தல் முடிந்த பின்னர் சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு இணைந்து செயற்படுவோமென்ற தமிழரசின் அழுகுரலுக்கு சரியான பதிலை யாழ். மாநகரசபை முதல்வர் ஆர்னோல்டை பதவி இறக்கியதன் வாயிலாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையான ரெலோவும் புளொட்டும் அம்பலப்படுத்தியுள்ளது.
இதேபோன்ற நிலைமைதான் தெற்கிலும் காணப்படுகின்றது. சிங்கள தேசத்தின் மூத்த கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் மாட்டின் வால் போன்று கீழ் நோக்கி வளர்ச்சி கண்டுள்ளன. முதலாவதிலிருந்து பிரிந்து உருவான சஜித் பிரேமதாசவின் மக்கள் சக்தியும், இரண்டாவதிலிருந்து பிரிந்து உருவான மகிந்தவின் பொதுஜன பெரமுனவும் கடந்த பொதுத்தேர்தலில் கண்ட பெருவெற்றி நிலையில் இன்றில்லை.
மகிந்த அணியிலிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேச நாணயக்கார, ஜி.எல்.பீரிஸ், டளஸ் அழகப்பெரும உட்பட நாற்பதுக்கும் அதிகமானோர் பிரிந்து சென்று சிறுசிறு அணிகளாகியுள்ளனர். சஜித் அணியிலிருந்த சிலரை ரணில் உள்வாங்கி விட்டார். மேலும் சிலர் மந்திகள் நிலையிலுள்ளனர்.
இப்போதுள்ள நிலைவரப்படி ஜே.வி.பி. முன்னணியில் நிற்பதாகவும், அதனாலேயே அவர்களுடன் தாம் போட்டியிடுவதாகவும் சஜித் பிரேமதாச அணியினர் மேடைகளில் கூறி வருகின்றனர். ஜே.வி.பி.யும் இந்த மேடையை தனக்கானதாக பயன்படுத்த எத்தனிக்கிறது. இதனால் பொதுஜன பெரமுனவில் ஒரு பகுதியினர் தேர்தலை மனதார விரும்பவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியைப் பொறுத்தளவில் தேர்தலை அது முழுமையாக எதிர்க்கிறது. இதன் தலைவரான ரணில், தேர்தல் பரப்புரைகளில் தாம் பங்கேற்கப் போவதில்லையென்று ஏற்கனவே அறிவித்திருந்தார். தேர்தல் நடைபெறாது என்பதை நன்கு தெரிந்து கொண்டதன் காரணமாகவும் இவ்வாறு அறிவித்திருக்கலாம். அதேசமயம் தேர்தல் பரப்புரை பொறுப்பை தமது தாய்மாமன் மகனான றுவான் விஜேவர்த்தனவிடம் ஒப்படைத்துள்ளார். றுவான் இப்போது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர். நல்லாட்சியில் பாதுகாப்பு இணை அமைச்சராக இருந்தவர். இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் பூட்டன் இவர். அதாவது, அவரது மகன் றொபேர்ட் சேனநாயக்கவின் (டட்லி சேனநாயக்கவின் சகோதரர்) புதல்வியின் மகன். குடும்ப அரசியல் மீளுருவாக்கம் பெறுவது வெளிப்படையாகத் தெரிகிறது.
இந்தப் பின்னணிகளுடன் உள்;ராட்சித் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறதாயினும், அரசின் வங்குரோத்து நிலை எதிர்பார்த்தவாறு இந்த மாதம் 9ம் திகதி நடைபெற வேண்டிய தேர்தலை இல்லாமற் செய்துவிட்டது. தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமாக இருப்பினும், ரணில் அரசிடம் நிதி இல்லையென்று கூறப்பட்டு தேர்தலை பின்போட(?) வைத்துள்ளது.
இதற்கு ரணில் சில குதர்க்கமான கருத்துகளை வெளியிட்டு, தேர்தல் ஆணைக்குழுவை அவமானப்படுத்தியது மட்டுமன்றி தம்மையும் சிறுமைப்படுத்திக் கொண்டார். ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் எப்போது நடைபெறுமென இந்த மாதம் 3ம் திகதி அறிவிக்கப்படுமென்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவ முன்னர் அறிவித்திருந்தார். ஆனால், அது நடைபெறவில்லை. அடுத்த ஒரு வாரத்துக்குள் – அதாவது 9ம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படுமென இப்போது தெரிவித்துள்ளார்.
சமவேளையில், உயர்நீதிமன்றம் 3ம் திகதி ஓர் அறிவிப்பை வெளியிட்டது. 2023ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் இத்தேர்தலுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை முடக்கக்கூடாதென்ற வகையில் நீதிமன்ற அறிவிப்பு அமைந்துள்ளது.
வரவு செலவுத் திட்டம் என்பது ஒரு வருடத்துக்கான 12 மாதங்களுக்குரிய முற்கூட்டிய அறிவிப்பு. வரவு இல்லையென்றால் செலவுக்கு எங்கே போவது? நீதிமன்றத் தீர்ப்பு ஒதுக்கப்பட்ட நிதியை முடக்கக்கூடாது என்று அறிவித்ததே தவிர, எந்தக் காலப்பகுதிக்குள் அதனை விடுவிக்க வேண்டுமென்ற வரையறையை நிறுவவில்லை.
வறுமை காரணமாக நாட்டிலுள்ள குழந்தைகள் ஒரு நேர உணவுடன் மட்டும் சீவிப்பதாக ஷசேவ் த சில்ட்ரன்| (குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு) சமகாலத்தில் ஓர் அறிக்கையில் சுட்டியுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு நிதி வழங்கினால் நாட்டு மக்கள் ஒரு நேர உணவுக்குக்கூட கையேந்தும் நிலை ஏற்படுமென ரணில் தரப்பு நியாயமான வாதத்தை முன்வைக்கும் நிலையிலுள்ளது.
மறுபுறத்தில், தேர்தல் ஆணைக்குழு உட்பட சுமார் பத்து வரையான சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு இந்த மாத இறுதிக்குள் புதியவர்கள் நியமனமாகவிருப்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 21வது திருத்தத்துக்கமைய இந்த குழுக்களுக்கான உறுப்பினர்கள் விண்ணப்பம் கோரப்பட்டு தெரிவும் முடிவடைந்து விட்டதாக அரசியலமைப்புச் சபையின் தலைவரான சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதுதான் இன்றைய நிலைமை என்றால், இதுவே தேர்தல் நாடகத்தின் உச்சக்கட்டம். தற்போது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராகவிருக்கும் புஞ்சிஹேவ நிச்சயமாக மீண்டும் இப்பதவிக்கு நியமிக்கப்படமாட்டார். அப்படியானால் உள்;ராட்சிச் சபைகளின் தேர்தல் நடைபெறும்போது ரணில் தரப்போடு இயைந்து போகக்கூடிய ஒருவர் அக்கதிரையில் இருப்பாரென்று நிச்சயம் சொல்ல முடியும். அதன் பின்னர் எல்லாம் சுபமாகவே நிறைவேறலாம்.
அரசியலமைப்பு, தேர்தல் சட்டம், சுயாதீன ஆணைக்குழுக்கள், நீதிமன்ற உத்தரவு, வாக்குரிமையை எதிர்பார்க்கும் அரசியல் கட்சிகள், அவர்களின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என அனைத்தையும் உச்சி விளையாடுவது எது?
ஜே.ஆரின் நிறைவேற்று அதிகாரத்துக்கு சவாலாக நிற்கிறது குட்டித் தேர்தல். வெல்லப்போவது யார்?