இலங்கையில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தினை முன்னெடுப்பது குறித்து தென்னாபிரிக்காவின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுடில்லியில் இடம்பெறும் ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்துகொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் டாக்டர் நலேடி பண்டோவுடன் சந்திப்பொன்றில் பங்கேற்றபோதே மேற்படி விடயம் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வின் பக்க நிகழ்வாக நடைபெற்ற இச்சந்திப்பு தொடர்பில் அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கையில்,
தென்னாபிரிக்காவில் கடந்த காலங்களில் இனங்களுக்கு இடையில் காணப்பட்ட முரண்பாடுகள் களையப்பட்டு அங்கு நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பொறிமுறையை ஒத்தவாறாக இலங்கையிலும் கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் நாம் கரிசனைகளை கொண்டுள்ளோம்.
அந்த வகையில், குறித்த சந்திப்பின்போது உள்நாட்டில் நல்லிணக்கப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது பற்றிய தென்னாபிரிக்காவின் கடந்த கால அனுபவங்கள் தொடர்பில் பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் அவர் வெளியிட்டுள்ள விடயங்களையும் உள்ளடக்கியதாக எமது செயற்பாடுகளை அடுத்துவரும் காலத்தில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
அவ்வாறு முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் அர்த்தமுள்ளவையாக அமைவதற்கு தென்னாபிரிக்காவின் அனுபவம் எமக்கு கைகொடுக்கும் என்றார்.
இதேவேளை, மேலும் சில பக்க நிகழ்வுகளின் போது சிலோவேனியன் மற்றும் பிரேசில் வெளிவிவகார அமைச்சர்களையும் அமைச்சர் அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.