வவுனியாவில் சீனிப்பாணியை தேன் என கூறி விற்பனை செய்த நபர் கைது

144 0

வுனியாவில் சீனிப்பாணியை காய்ச்சி, அதனை தேன் என்று கூறி விற்பனை செய்த நபரை சுகாதார பிரிவினர் சுற்றிவளைத்துப் பிடித்ததோடு, அவரிடமிருந்து 41 லீற்றர் சீனிப்பாணியை கைப்பற்றியுள்ளனர்.

தேன் என சீனிப்பாணியை நபரொருவர் விற்பனை செய்வதாக வவுனியா சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொது சுகாதார பரிசோதகர்கள் காத்தான் கோட்டம் பகுதியிலுள்ள வீடொன்றை சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது அந்த வீட்டில் விற்பனைக்கு தயாரான நிலையில் மொத்தமாக 41 லீற்றர் சீனிப்பாணி நிரப்பப்பட்ட 55 போத்தல்களையும், சீனிப்பாணி காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் சுகாதார பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்தே சீனிப்பாணி விற்பனை செய்த நபரை நெளுக்குளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதான நபரோடு கைப்பற்றப்பட்ட சீனிப்பாணி போத்தல்கள் மற்றும் ஏனைய பொருட்களும் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 10ஆம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சீனிப்பாணியை தேன் என கூறி, ஏ9 வீதிகளில் தினசரி வியாபாரம் செய்வதுடன், அதனை யோகட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் சந்தேக நபர் வழங்கி வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.