சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரைவில் ‘காலநிலை அறிவு இயக்கம்’ செயல்படுத்தப்பட உள்ளது என்று, காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் பேசியதாவது:
காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தவும், தகவமைத்துக் கொள்ளவும் நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் பல திட்டங்களை தமிழக அரசு விரைவாக செயல்படுத்தி வருகிறது. தமிழகத்துக்கான காலநிலை திட்டத்தை அறிவித்து, அதற்கு ரூ.500 கோடி ஒதுக்கி, நாட்டுக்கே முன்மாதிரியாக செயல்படுகிறோம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘காலநிலை ஸ்டுடியோ’ அமைக்கப்பட்டு, தமிழகத்துக்கென தனித்துவ மாதிரிகளை உருவாக்கவும், அதற்கான ரேடார்களை நிறுவவும் ரூ.10 கோடி ஒதுக்கி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடல் அரிப்பை தடுக்கவும், கடற்கரையின் பல்லுயிரியத்தை பேணவும் பனைமரங்கள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் ராம்சர்அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்கள் எண்ணிக்கையை 13 ஆகஉயர்த்தியுள்ளோம். இத்திட்டங்களை ஒருங்கிணைக்க நாட்டிலேயே முதல்முறையாக ‘தமிழ்நாடுபசுமை காலநிலை நிறுவனம்’ உருவாக்கப்பட்டுள்ளது. ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, என் தலைமையில் ‘காலநிலை மாற்ற நிர்வாக குழு’ அமைக்கப்பட்டுள்ளது.