கோட்டாபய கொலை முயற்சி வழக்கு: அரசியல் கைதியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு

186 0

அரசியல் கைதியான சிவலிங்கம் ஆருரனை பொலிஸார் சித்திரவதை செய்து கடும் காயங்களை ஏற்படுத்தியுள்ளனர் என்பதனை சாட்சியங்கள் மூலம் நீதிமன்றிற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது என எதிரி தரப்பில் முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து அரச தரப்பின் முக்கிய சான்றான முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார்.

14 வருட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை நேற்றைய தினம் (02.03.2023) நிராகரித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி கொழும்பு – கொள்ளுபிட்டி பித்தலை சந்தியில், பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் மரணமடைந்துள்ளதுடன், பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்ச, இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்குக் கடும் காயங்களுக்குள்ளாகினர்.

அரச சொத்துக்களுக்கு பெரும் சேதமடைந்துள்ளன. இச்சம்பவத்தில் 5 பேருக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் 2013ஆம் ஆண்டு மார்கழி மாதம் 4ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இரண்டாம் எதிரியான பொறியியலாளர் சிவலிங்கம் ஆருரனுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகிய பிரதி சொலிசிடர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ரோகாந்த அபேசூரிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் உண்மை விளம்பல் விசாரணை நிறைவடைந்துள்ளது.

இதனையடுத்து, தனது சமர்ப்பணத்தில் பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிஸார் இரண்டாம் எதிரியான சிவலிங்கம் ஆருரனை தடுத்து வைத்து விசாரணை செய்த காலத்தில், கைதியைத் தாக்கவோ சித்திரவதை செய்யவில்லையெனவும் தனது வாதத்தை முன்வைத்ததுடன், கோட்டாபய கொலை முயற்சி தாக்குதலின் எதிரி சதியில் ஈடுபட்டதையும், கொலை முயற்சிக்கு உதவி ஒத்தாசை வழங்கியதையும், சொந்த விருப்பத்தில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமாகத் தமிழ் மொழியில் எழுதி உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கியுள்ளார்.

எனவே, எதிரியால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை அரச தரப்பில் எதிரிக்கு எதிரான சான்றாக நெறிப்படுத்துவதற்கு நீதிமன்றம் கட்டளையிட வேண்டும் என வாதத்தை முன் வைத்தார்.