முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புதிதாக எவ்விதமான நிர்மாணங்களையும் செய்யக் கூடாது என கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் கட்டளையை பிறப்பித்திருந்தது.
இந்தக் கட்டளையை வலுச்சேர்க்கும் வகையில் நவம்பர் மாதம் 24ஆம் திகதி பிறிதொரு கட்டளையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிமன்றக் கட்டளைகள் புறக்கணிக்கப்பட்டு தற்பொழுது குருந்தூர் மலையில் விகாரை அமைக்கும் பணிகள் நிறைவுக்கு வந்துள்ளன.
புராதன சமய பண்பாடுகள் நிறைந்த வரலாற்றுத் தலமான குருந்தூர் மலை விவகாரத்தால் அண்மைக் காலமாகவே இந்து – பெளத்தம் மற்றும் தமிழர்கள் – சிங்களவர்கள் என இரு துருவமயப்பட்ட சமூகத்தினரின் மத்தியில் சர்ச்சைக்குரிய தகவல்கள் புற்றீசல் போல் வெளிக்கிளம்பிய வண்ணமுள்ளன.
உண்மையில், குருந்தூர் மலையின் ஆதிகால வரலாறு என்ன? ஆரம்ப காலத்தில் எத்தரப்பினர் அங்கே ஆதிக்கம் செலுத்தினர்? எந்த சமய பண்பாடு அங்கே நிலவியது என்பதை பற்றி சுருக்கமாக விளக்குகிறார், வரலாற்று ஆய்வாளர் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம்.
சூடுபிடித்திருக்கும் குருந்தூர் மலை விடயம் தொடர்பாக வீரகேசரிக்கு அவர் கருத்துரைக்கையில்,
“முல்லைத்தீவு மாவட்டத்தில் நெடுங்கேணி எனும் இடத்திலிருந்து வடகிழக்குப் பக்கத்தில் சுமார் 14 கி.மீ தூரத்தில் தண்ணிமுறிப்பு குளம் அமைந்துள்ளது. அந்த குளத்தின் வடக்கு பக்கத்தில் தான் குருந்தூர் மலை உள்ளது. இந்த மலைக்கு குருந்தனூர் மலை என்றொரு பெயருமுண்டு.
இந்த மலையில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் காணப்பட்ட பழங்கால கட்டட இடிபாடுகளுக்கு மத்தியில் அங்கே ஆதி ஐயனார் எனும் சிவனை தெய்வமாக கருதி இந்து மக்கள் வழிபட்டு வந்தனர்.
அதேவேளை ஆதி ஐயனாருக்கு பூசைகள் செய்து, படையல் வைத்து வழிபடும் முறையும் வழக்கமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இத்தகைய சூழ்நிலையில் அந்த இடத்துக்கு வந்த பௌத்த பிக்குகள் சிலர் மலையில் காணப்பட்ட இடிபாடுகளை பார்த்து, “இது எமது பௌத்த வழிபாட்டுக்குரிய இடம்” என கூறியதை தொடர்ந்தே, குருந்தூர் மலை தொடர்பான பிரச்சினைகள் ஆரம்பமாயின.
அதனையடுத்து அங்கு இராணுவத்தோடு இணைந்து தொல்பொருள் திணைக்களம் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தொடங்கியது.
குறிப்பாக, இந்த மலையின் உச்சியில் பௌத்த தூபி இருந்திருக்கக்கூடும் என கருதப்பட்ட இடத்தில் ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தது.
இவ்வாறு அகழ்வுப் பணிகள் தொடர்ந்தபோது அந்த இடத்தில் எட்டு வரிகளை கொண்ட ஓர் உருளை வடிவ தொல்பொருள் சின்னம் காணப்பட்டது.
உடனே, இது பௌத்த தூபிக்குரிய ‘யூப்ப கல’ என தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறினர்.
யூப்ப கல அல்லது யூப்ப ஸ்தம்பம் என்றால் பழங்காலத்தில் பௌத்த தூபியின் உச்சியில் அமைக்கப்படும் ஒரு கற்தூண் ஆகும்.
எட்டுத் திக்கும் உள்ள காவல் தெய்வங்களுக்காக இந்த தூண் தூபியின் உச்சியில் வைக்கப்படுவது பழங்கால கட்டுமான வழக்கமாக இருந்தது.
இதுபோன்ற தூண்கள் 5ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தூபிகளில் காணப்பட்டன. அவற்றை தற்போது பார்த்தால், கரடு முரடான தோற்றத்திலேயே இருக்கும். மிஹிந்தலையில் இத்தகைய யூப்ப ஸ்தம்பமொன்றே உள்ளது.
எனினும், 5ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரான காலங்களில் இந்த தூண்களை அமைக்கும் வழக்கம் இருக்கவில்லை. எனினும், யூப்ப கல தூணுக்கு பதிலாக ‘தேவதா கொட்டுவ’ எனும் சதுர வடிவ அமைப்பே காணப்பட்டிருக்கிறது.
குருந்தூர் மலை அகழ்வின்போது வெளிப்பட்ட இந்த கல்லின் மேற்பகுதி எட்டுப் பட்டை (வரிகள்) கொண்டது எனவும், அடிப்பகுதி சதுர வடிவானது எனவும் கூறப்படுகிறது. இந்த உருளை போன்ற கல்லை பௌத்த தூபிக்குரிய யூப்ப கல என சிங்கள தரப்பினர் கூறினர்.
ஆனால், இது யூப்ப ஸ்தம்பம் அல்ல என்பதற்கும் ஆதாரமான குறிப்புகள் உள்ளன.
‘புராண அபயகிரி விஹாரய’ என்ற நூலில் பேராசிரியர் டி.ஜி.குலதுங்க ‘யூப்ப ஸ்தம்பம்’ என்பது பண்டைய தூபிகள் அனைத்திலும் கட்டாயமாக அமைக்கப்பட வேண்டிய ஒரு பாகம் அல்ல எனவும் சேருவில தூபி, சாஞ்சி தூபி, ருவன்வலிசாய தூபி போன்ற தூபிகளில் இந்த அமைப்பு இருந்ததற்கான குறிப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல மிகப் பெரிய பழைமையான ஜேதவனராம போன்ற தூபிகளிலும் ‘யூப்ப கல’ இருக்கவில்லை. அப்படியாயின், குருந்தூர் மலையிலுள்ள இந்த உருளைவடிவ கல் ‘சிவலிங்கம்’ தான் என்பதே உண்மை. அதுவும் அந்த லிங்கம் பல்லவர் கால கட்டடக்கலை பாணியை கொண்ட எட்டுப்பட்டை தாராலிங்கம்.
தாராலிங்கத்தில் மூன்று வகைகள் உள்ளன. அவற்றில் எட்டு பட்டை கள் அல்லது வரிகள் கொண்ட தாராலிங்கங்கள் இரண்டாவது வகையை சேர்ந்தவை.
இதுபோன்ற பல தாராலிங்கங்கள் தமிழகத்திலும் உள்ளன. எனவே, குருந்தூர் மலையில் காணப்படுவது சிவ வழிபாட்டைக் குறிக்கும் தாராலிங்கமே ஆகும்.
மேலும், இது பல்லவர் காலத்துக்கு முற்பட்ட நாகர் கால லிங்க வடிவம் என பேராசிரியர் எஸ். பத்மநாதன் தனது பேட்டியிலும் கூறியிருந்தார்.
அத்துடன் இந்த லிங்கத்தின் புகைப்படத்தை தமிழகத்தின் இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு வேலுச்சாமியிடம் காட்டினேன். அவர் இதனை ‘எட்டுப்பட்டை அஷ்டலிங்கம்’ என தெரிவித்தார்.
இத்தகைய ஆதாரங்களை கொண்டுள்ள லிங்கம் காணப்படும் இடத்தை ஆதி ஐயனார் கோவில் என தமிழர்கள் வழிபட்டு வந்தனர். இது சிவ வழிபாட்டுக்குரிய தலம் என்றும் இந்து சமயம் பின்பற்றப்பட்ட இடமெனவும் கூறினர். எனினும், அங்கு கோயில் கட்டப்படவில்லை.
அதேவேளை தொல்லியல் திணைக்களம் இதை பௌத்தர்களின் வழிபாட்டுக்குரிய இடம் என்றும் பௌத்த தூபி இருந்த இடம் எனவும் உறுதியாக குறிப்பிடுகிறது.
இத்தகைய சூழலிலேயே குருந்தூர் மலை சர்ச்சைக்குரிய இடமானது.
எனினும், குருந்தூர் மலையில் இந்து, பௌத்தம் ஆகிய இரு மதங்களும் இருந்துள்ளன என்பதே பலர் நம்ப மறுக்கும் உண்மை.
குருந்தூர் மலையில் இரு மத வழிபாடுகளும் நிலவியமைக்கு முக்கியமான ஆதாரம், ஆங்கிலேயர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியே எனலாம்.
ஆங்கிலேய ஆய்வாளர்களான ஜே.பி. லூயிஸ், எச்.சி.பி. பெல் ஆகியோர் குருந்தூர் மலையில் ஆய்வுகளை மேற்கொண்டு சில குறிப்புகளை பதிவு செய்துள்ளனர்.
அதன்படி, குருந்தூர் மலையில் மிகப் பெரிய ஆவுடையார் (லிங்கத்தின் அடிப்பாகம்) இருந்ததாகவும், அதனருகில் கை கூப்பியவாறு ஒருவர் அமர்ந்திருப்பதை போன்ற சிலை, உடைந்த நந்தி சிலை, செங்கல்லாலான பழங்கால கிணறொன்று இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் ஆவுடையார் 3 அடி அகலமும் 3.3 அடி நீளமும் கொண்ட சதுர வடிவுடையது. இதன் நடுப்பகுதியில் 1.1 அடி விட்டமுடைய குழி உள்ளது. இதுவே வட்ட வடிவமான லிங்கம் இருந்த பகுதியாகும். இந்த ஆவுடையார் சோழர் காலத்துக்குரியது எனலாம்.
இவை யாவும் சிவ வழிபாட்டுத் தலத்தின் எச்சங்கள் என அவர்கள் குறிப்பிட்ட அதேவேளை அங்கே ஒரு தூபியின் அடையாளம் இருந்ததால், பௌத்த வழிபாடும் இருந்திருக்கிறது என்பதை இதனூடாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த இரு வழிபாடுகளுக்கும் உரிய ஆதாரமான ஆங்கில ஆய்வுக் குறிப்புகளை H.C.P.பெல் 1905ஆம் ஆண்டு தனது ஆய்வறிக்கையில் 34ஆம் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
A small nearly levelled dagaba.
A few stone pillars beside which lies the greatly damaged stone figure of a bull. This was probably a sivite temple.
A large yoni stone 3 ft. by 3 ft. 3 in. with a hole 1 ft.1 1/2 in. in diameter cut in it.
A brick well 4 ft. 6 in. wide and 25 feet deep. 20 feet being dry laid brickwork and the rest cut into soft rock.
A sedent figure in an attitude of prayer cut in bas-relief on a slab of stone 2 ft. 6 in. by 1 ft. 9 in. several pillar buildings with Naga-raja guardstones.
A brick building probably a Hindu Kovil, which has collapsed and become a mound.
These show a thorough mixture of buddhist and Hindu ruins.
எனவே, இவற்றின் அடிப்படையில் குருந்தூர் மலையை இந்து மற்றும் பௌத்தம் ஆகிய இரு மத வழிபாட்டுக்கும் உரிய இடமாக கருதலாம்.
அத்தோடு கலிங்க மாகோன் என்ற மன்னன் ஆட்சி செய்த காலத்தில் குருந்தூர் மலையை அவன் படைத்தளமாக பயன்படுத்தியதாக சூளவம்சமும் குறிப்பிடுகிறது.
எனவே, வீர சைவத்தை போற்றி வழிபட்ட கலிங்க மாகோன் காலத்தில் சிவன் கோவில் கட்டாயமாக இருந்திருக்க வேண்டும். அல்லது சோழர் காலத்திலே கட்டப்பட்ட சிவன் கோவில் மாகோன் காலத்தில் வழிபாட்டுக்குரியதாக காணப்பட்டிருக்க வேண்டும்.
அந்த வகையில், குருந்தூர் மலையில் சிவன் கோவில், பௌத்த தூபி இரண்டும் இருந்துள்ளன என்பது உறுதியாகத் தெரிகிறது.
எனவே, இந்துக்கள், பௌத்தர்கள் என இரு சாராருக்கும் உரிய இடமாக குருந்தூர் மலைப் பிரதேசத்தை கருதலாம்.
ஆயினும், அங்கு பௌத்த சமயம் மட்டும் தான் இருந்தது என்பதை ஏற்க முடியாது. இதில் ஆதங்கத்துக்குரிய விடயம் என்னவென்றால்,
குருந்தூர் மலையில் காணப்பட்ட சிவ வழிபாட்டுக்குரிய தொல்லியல் சின்னமான சதுர வடிவ ஆவுடையார், தமிழ் சமூகத்தை சேர்ந்த சிலரால் வன்னி, குமுழமுனை கிராமத்தில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆவுடையாரில் லிங்கம் இருந்த குழிப் பகுதியில் பிள்ளையார் சிலையை வைத்துள்ளனர். இது மிகப் பெரும் தவறு.
குறிப்பிட்ட ஓரிடத்தில் சமய வழிபாட்டுக்குரிய தொல்பொருள் சின்னமொன்று காணப்பட்டால், அந்த சின்னத்தை அகற்றாமல், அதனை அங்கேயே வைத்து, அந்த இடத்தில் கோயில் கட்டி வழிபடுவதே சரியானது. அதை விடுத்து, அச்சின்னத்தை அங்கிருந்து அகற்றுவதும், அதை வேறோர் இடத்துக்கு எடுத்துச் சென்று வைப்பதும் செய்யத்தகாத செயலாகும்” என்று கவலையுடன் தெரிவித்தார்.
மா. உஷாநந்தினி