சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றவுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணங்களை குறைக்க அவதானம் செலுத்தியுள்ளோம்.
நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வழங்கியுள்ள ஒத்துழைப்பை வரவேற்கிறோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் நிதி நிலைமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி தற்போது உயர்வடைந்துள்ளது.நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்த ஒரு சில கடுமையான தீர்மானங்களினால் இந்த முன்னேற்றத்தை அடைய முடிந்துள்ளது.ரூபாவின் பெறுமதியை நிலையான தன்மையில் பேணும் பட்சத்தில் நிதி நிலைமையை ஸ்தீரப்படுத்த முடியும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இம்மாத இறுதிக்குள் பெற்றுக்கொள்ள முடியும்.நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டவுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணங்களை குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காகமுன்னெடுக்கப்பட்டுள்ள இருதரப்பு மற்றும் பல்தரப்பு பேச்சவார்த்தைகள் சாதகமாக உள்ளன.
இந்தியா,சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பை முழுமையாக வரவேற்கிறோம்.சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றவுடன் நாட்டின் கடன் நிலை நிலைபேறான தன்மையில் பேணப்படும்.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அரசாங்கம் ஒருபோதும் மறுக்கவில்லை. தற்போதைய வாழ்க்கை செலவுகள் ஒட்டுமொத்த தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார பாதிப்பில் இருந்து மீள வேண்டுமாயின் பாரம்பரிய அரசியல் முறைமைகள் மற்றும் அடிப்படை கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசியல் காரணிகளுக்கு முன்னுரிமை வழங்க முடியாது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையுமே தவிர குறைவடையாது.உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதால் அரச கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்றார்.