உள்ளூராட்சி மன்ற தேர்தலை திகதி குறிப்பிடாமல் பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசாங்கம் மிகவும் மோசமான முறையில் தலையிட்டு வருகிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
பெப்ரல் அமைப்பு வெள்ளிக்கிழமை (3) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது இவ்வாறு கூறிய அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதியை தேர்தல் ஆணைக்குழு இன்று தீர்மானிப்பதாக அறிவித்திருந்தது. இருந்தபோதும் தேர்தல் முறையை மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பது தெளிவாக தெரிகிறது.
வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் அபாயத்தில் நாம் இருக்கிறோம். வரையறைகளை அமைத்து, அதற்கமைய மீண்டும் வேட்புமனு கோருவதற்கே அதிக வாய்ப்பு காணப்படுகிறது.
அத்தோடு இதனுடன் இணைந்ததாகவே தேர்தல் மீளாய்வுக் குழு இருக்கிறது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் பல மாதங்கள் அல்லது ஒரு வருடமேனும் பிற்போடப்படும் அவதான நிலையே இருக்கிறது.
என்றாலும், இந்த இரண்டு குழுக்களையும் இணைக்கும் முயற்சியிலேயே நாங்கள் இருக்கிறோம். தொகுதிகள் குறைவடைவது சாதகமாக இருந்தாலும், இதன் காரணமாக இந்த தேர்தல் கால வரையறை இல்லாமல் போகும் நிலை இருக்கிறது. இது பாரதூரமான விடயம்.
மேலும், உள்ளூராட்சி மன்ற தேர்தலை திகதியின்றி ஒத்திவைப்பதற்கும் அவர்கள் எதிர்பார்க்கும் தேர்தல் வரும் வரை இந்த தேர்தலை பிற்போடுவதற்குமே அரசாங்கம் முயற்சிக்கிறது என்பது மிகவும் தெளிவாக தெரிகின்றது.
நாட்டின் ஜனநாயகத்தை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் மோசமான முறையில் தலையீடு செய்துவரும் நிலையே தற்போது இருக்கிறது.
அத்துடன், உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கத்துக்கு தோல்வி ஏற்படும் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கவேண்டியதில்லை.
தேர்தலில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டாலும், அதனால் அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கு எந்த தடையும் இதன் மூலம் ஏற்படப்போவதில்லை.
என்றாலும், தேர்தல் பெறுபேறுகள் எதுவாக இருந்தாலும், அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்துவதற்கு இடமளிக்காவிட்டால், இதனால் ஏற்படும் பெறுபேறு இதனை விட மோசமானதாக இருக்கும் என்பதை அரசாங்கம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மக்களின் நிலைப்பாட்டை அமைச்சரவையின் தீர்மானம் மூலம் கட்டுப்படுத்த முடியும் என அரசாங்கம் நினைக்குமாயின், அது அரசாங்கத்தின் முட்டாள்தனமாகும் என்றார்.