இலங்கையை பாதித்துள்ள பாரிய காயத்தை சுகப்படுத்துவதற்காக ஜனாதிபதி கடுமையான தீர்மானங்களை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டாலும், எதிர்வரும் 6, 7 மாதங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.
மொனராகலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளருடனான கலந்துரையாடல் நேற்று மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கையை பாதித்துள்ள பாரிய காயத்தை சுகப்படுத்துவதற்காக ஜனாதிபதிக்கு கடுமையான தீர்மானங்களை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளபோதும், எதிர்வரும் செப்டெம்பர், டிசம்பர் மாதமாகும்போது மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியுமான நிலை ஏற்படும்.
பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, குறைத்துக்கொண்டு செல்கிறோம். எதிர்வரும் காலங்களில் மின்சார கட்டணங்களையும் குறைப்பதற்கு முடியும்.
மேலும், நாடு அராஜகமடைந்த நேரத்தில் நாட்டை பொறுப்பேற்று நடத்த எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
சஜித் பிரேமதாஸவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. என்றாலும், எவரும் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன்வராமல் புறக்கணித்தனர்.
இறுதியில், நாட்டை பொறுப்பேற்குமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, எந்த நிபந்தனையும் இல்லாமல் பொறுப்பேற்றார்.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது எதிர்கால அரசியல் தொடர்பில் சிந்திக்காமல், மக்கள் தொடர்பாக சிந்தித்து அவரின் தூரநோக்கு சிந்தனையின் பிரகாரம், இந்த நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல முன்வந்தார். ஆனால், எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துடன் டீல் போடுவதாக குற்றம் சாட்டினர்.
ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்கும்போது எல்லா இடங்களிலும் இருந்த வரிசைகளை இல்லாமலாக்கினார். மின்சார துண்டிப்பை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுத்து, தற்போது மின்சார துண்டிப்பு இடம்பெறுவதில்லை.
விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பெற்றுக்கொடுத்துள்ளோம். இரண்டு மாதங்களுக்குள் நாட்டை படிப்படியாக இயல்புநிலைக்கு கொண்டுந்தோம்.
இருந்தபோதும், மக்களின் பிரச்சினைகள் முழுமையாக தீரவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி அடுத்த மாதமளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இந்த நிதியுதவி கிடைத்தால், அடுத்துவரும் 6, 7 மாதங்களுக்குள் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, மக்கள் நிம்மதியாக வாழ முடியுமான சூழலை ஏற்படுத்த முடியும் என்றார்.