தேவைப்பாடுகளையும், குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

113 0

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் காணப்படும் தேவைப்பாடுகளையும், குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யுமாறு கோரி இன்று (27) காலை 9.00 மணியளவில் பொத்துவில் பிரதான வீதியின் பொத்துவில் ஆதார வைத்தியசாலை அருகாமையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

“அப்பாவி உயிர்களைக் காப்பாற்ற வசதிகளை ஏற்படுத்தித்தா ” எனும் தொனிப்பொருளில் பொத்துவில் நலன் விரும்பிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உடனடியாக நிரந்தர வைத்திய அத்தியட்சகரை நியமி, உடனடியாக சத்திர சிகிச்சை நிபுணரை நியமி, உடனடியாக பொது வைத்திய நிபுணரை நியமி,நேர்மையாக கடமை செய்த வைத்திய அத்தியட்சகருக்கு இடமாற்றமா ?, அத்தியவசிய மருந்துகளையும், வைத்திய உபகரணங்களையும் பெற்றுத்தா,நாங்களும் மனிதர்கள், அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே எமது பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளைப் பெற்றுத் தாருங்கள் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியும் கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் பலரும் ஈடுபட்டனர்.

பின்னர் கோசங்களை எழுப்பிவாறு பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பிரதான நுழை வாயில் சென்று அங்கும்  அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் மகஜர் கையளிக்க முற்பட்ட போது நிருவாகத்தினரால் மகஜர் கையேற்கவில்லை.