” இன்று உங்களில் பலர் வெளிநாடு செல்லும் எண்ணத்தில் உள்ளனர். நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிலையிலிருந்து அவர்கள் எதிர்காலத்தைப் பார்க்கிறார்கள். ஆனால் வெற்றியை அடைய நாம் மீண்டும் போராட வேண்டும். நமது மதிப்பைப் பாதுகாக்க நாம் தனியாகவும் குழுவாகவும் போராட வேண்டும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல எனக்கு இயலுமை இருந்தது. அதைத்தான் என் அப்பாவும் விரும்பினார். ஆனால் நான் என் நாட்டை மதிப்பதால் இந்த நாட்டில் இருக்க முடிவு செய்தேன். அதனால் பாடசாலையை விட்டு வெளியேறியபின்னர் வெளிநாடு செல்லவில்லை. இந்த நாட்டிலேயே உயர்கல்வி கற்றேன். நான் என் நாட்டுக்கு கடன்பட்டிருக்கிறேன். இந்த நாடு எனது கல்விக்காக செலவிட்டது. அதனால் இந்த நாட்டிலிருந்து கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. உங்கள் அனைவருக்கும் நாட்டுக்காகச் செய்ய வேண்டிய இரண்டு பணிகள் உள்ளன. ஒன்று நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது. மற்றையது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது. எங்களுக்கு இனம், மதம் என்று பிரிய முடியாது. நீங்கள் அனைவரும் உயர்கல்வி பெற்று இந்த நாட்டுக்கு திரும்பி, உங்கள் சமூகப் பொறுப்பை ஏற்று, நாட்டின் எதிர்காலம் சிறக்க பங்களிக்க வேண்டும்.”
சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ரோயல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் ஆற்றிய உரையின் ஒரு சிறு பகுதியே இதுவாகும். அதாவது நாடு பொருளாதார ரீதியாக கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் பலரும் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும் குடிபெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுவருகின்றது. குறிப்பாக மூளைசாலிகள் நாட்டைவிட்டு வெளியேறுவதாக புள்ளிவிபரங்களும் அவ்வப்போது பல்வேறு தரப்பினராலும் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அண்மையில் கூட பல வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் கரிசனை வெளியிட்டிருந்தனர். இவ்வாறு வைத்தியர்கள் உள்ளிட்ட மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறும் போது நாட்டின் முன்னேற்றத்தில் பாரிய பாதிப்பு ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு துறைசார் நிபுணர்களும் இது குறித்து கரிசனை வெளியிட்டுவருகின்றனர்.
நாடு நெருக்கடியான நிலைமையில் இருக்கும்போது சவால்களை எதிர்கொண்டு அதனை கட்டியெழுப்ப வேண்டுமே தவிர இதற்காக நாட்டைவிட்டு குடிபெயர்வது தீர்வாகாது. அது நாட்டுக்கு நல்லதாக அமையாது என்ற கருத்தும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. முக்கியமாக இளைஞர் யுவதிகள் மத்தியில் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள முடியாது என்றும் எனவே வெளிநாடுகளுக்கு சென்று அங்கு வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே நன்றாக இருக்கும் என்பது தொடர்பான ஒரு கருத்தும் நிலவுவதை காணமுடிகிறது.
முக்கியமாக தற்போதைய நெருக்கடி நிலைமையின் காரணமாக இலங்கையிலிருந்து முன்னேற முடியாது என்ற கருத்தும் இளைஞர் யுவதிகள் மத்தியில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த சிக்கலான புதிய நிலைமை தொடர்பாக நாம் ஒரு சில இளைஞர் யுவதிகளிடம் உரையாடினோம்.
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்
இந்நிலையில் கொழும்பில் சிறிய நடுத்தர முயற்சியாளராக இருக்கும் இளைஞரான பரண ரனசென் என்பவர் எம்மிடம் கருத்து பகிர்கையில்,
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டை விட்டு வெளியேறுவது மிகவும் தவறான விடயம் என்பதே எனது கருத்தாகும். நெருக்கடி காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஆக சிறிய நடுத்தர வர்ததக முயற்சியாளர்களாகிய நாங்களே இருக்கின்றோம். எங்களுக்கே மிகப்பெரிய அடி விழுந்தது. ஆனாலும் நாங்கள் இந்த நாட்டுக்காக இங்கே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நாடு மீது எங்களுக்கு பற்று இருக்கின்றது. நாம் இந்த நாட்டில் தான் படித்தோம். இந்த நாட்டின் வளங்களைக் கொண்டு வளர்ந்தோம். எனவே அதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும். அதனை விட்டுவிட்டு நெருக்கடி நேரத்தில் நாட்டைவிட்டு வெளியே சென்று விடுவது பொருத்தமாக அமையாது. நாட்டில் இருக்கின்ற இயற்கை வளங்கள், மனித ஆற்றல்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். நாட்டில் காணப்படுகின்ற சந்தை வாய்ப்புகள் சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். நாம் எமது ஆற்றலை பயன்படுத்தாமல் இருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் காலையில் ஊடகங்கள் ஊடாக எமக்கு எதிர்மறையான விடயங்களை பரப்பப்படுகின்றன. எதிர்மறையான சிந்தனைகள் ஊட்டப்படுகின்றன. நாட்டில் நடக்கின்ற எதிர்மறையான விடயங்கள் மட்டுமே வருகின்றன. அதனை தவிர்த்து மக்களின் நேர்மறை எண்ணங்களை உருவாக்கக் கூடிய இளைஞர் யுவதிகளின் ஆற்றலை அதிகரிக்க கூடிய விடயங்கள் ஊடகங்களில் இடம்பெறவேண்டும். இளைஞர் யுவதிகள் மத்தியில் எதிர்பார்ப்பை நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் படித்து பட்டதாரியாகி ஒரு நிலைக்கு வந்தபின்னர் நாட்டை விட்டு செல்வது சரியாகாது. எனக்கு இன்னும் இந்த நாட்டிலிருந்து முன்னேறி எம்மை வளப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்று குறிப்பிட்டார்.
பரண ரனசென் கூறுவதைப்போன்று கடந்த காலங்களில் வங்கி வட்டி வீதங்கள் அதிகரித்ததால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் தொழில் வாய்ப்புகளை இழந்தனர். எனினும் இவ்வாறு ஒரு சில முயற்சியாளர்கள் தொடர்ந்து நெருக்கடிகளுக்கு மத்தியிலும் செயற்படுகின்றமை முக்கியமானதாகவே அமைகின்றது.
மலையகத்தை சேர்ந்த இளம் ஆய்வாளர் விஜய் என்பவர் இது குறித்து குறிப்பிடுகையில்,
இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கிறது. மக்கள் பொருளாதார கல்வி தொழில் ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றனர். தங்களுக்கான தகுதியான தொழிலை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. பணம் இருக்கின்றவர்களும் பணம் இல்லாதவர்களும் கூட எப்படி வெளிநாடுகளுக்கு சென்று தமது வாழ்க்கையை முன்னேற்றுவது என்பது குறித்து ஆராய்கின்றனர். ஆனால் இது ஒரு சிறந்த நிலைப்பாடு அல்ல. இதனால் எமது சமூகத்துக்கு எமது நாட்டுக்கும் பாரிய பாதிப்பு ஏற்படும். மூளை சாலிகள், திறமையானவர்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது அது எமது சமூகத்தின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும். எனவே இதற்கு மாற்றத்திட்டத்தை கொண்டு வர வேண்டும். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு புதிய எதிர்பார்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும். நாடு முழுவதும் அந்த உற்பத்திகள் விநியோகிக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கில் உணவு உற்பத்தியை அதிகரிக்கலாம். பெருந்தோட்டங்களில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க முடியும். மேலும் இளம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் அவசியமாகின்றன. என்னை பொறுத்தவரையில் இந்த நாட்டில் இருந்து முன்னேற முடியும் என்று நம்புகின்றேன். இந்த நாட்டை எம்மால் மீட்டெடுத்து இந்த நாட்டின் வளர்ச்சிக்காக நாம் பாடுபட முடியும். எனக்கு இருக்கின்ற தொடர்புகளுக்கு நானும் வெளிநாடு செல்லலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. நாம் இந்த நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
எதிர்பார்ப்பை ஏற்படுத்துங்கள்
மேலும் பல்வேறு ஆய்வு செயற்பாடுகளில் ஈடுபடும் யாழ். யுவதி யதுர்ஷா என்பவர் பகிர்கையில்,
என்னை பொறுத்தவரையில் நான் மேல் படிப்புக்காக வெளிநாடு சென்று படித்துவிட்டு மீண்டும் இலங்கையில் வந்து பணியாற்ற வேண்டும் என்று நினைக்கின்றேன். இலங்கையில் எம்மால் மீண்டு வர முடியும். எமது எதிர்காலத்தை சீர்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அதற்கேற்ற கொள்கைகள் அதற்கேற்ற அணுகுமுறைகள் அவசியமாகின்றன. அதற்கான அழுத்தத்தை பிரயோகிப்பதற்கான பொறுப்பும் இளைஞர் யுவதிகளுக்கு இருக்கின்றது. வெளிநாடுகளுக்கு சென்ற தமது வாழ்க்கையை அடுத்தக்கட்டத்தை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் இளைஞர் யுவதிகள் மத்தியில் ஏற்பட்டிருப்பதை காணமுடிகின்றது. அதிகளவானோர் அவ்வாறு சிந்திக்கின்றனர். உள்நாட்டில் சம்பளம் போதாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இதில் செல்வாக்கு செலுத்துகின்றன. இலங்கையை பொறுத்தவரையில் தற்போது தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஒரு போக்கு அதிகரித்திருக்கின்றது. இது எந்தளவுக்கு எல்லோருக்கும் சாத்தியமாகும் என்பதும் கேள்விக்குறியாகும். காரணம் தற்போது வெளிநாடு ஒன்றுக்கு குடிபெயர்வது என்பது இலகுவான விடயமல்ல. அதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது. அதனை எவ்வாறு இளைஞர் யுவதிகள் திரட்டப்போகின்றார்கள் என்பது கேள்வியாகும். எப்படியிருப்பினும் இந்த நெருக்கடி நேரத்திலும் கூட எம்மால் மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. நான் வெளிநாட்டுக்கு சென்று படித்தாலும் படிப்பை முடித்துவிட்டு இலங்கைக்கு திரும்பி விடுவேன் என்கிறார்.
இதுபோன்ற கருத்துக்களை பார்க்கும்போது இலங்கையில் இருந்து தொழில் புரிந்து சமூகங்களை கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணம் சகலருக்கும் இருக்கின்றதை காணமுடிகிறது. ஆனால் இந்த நிலைமைகள் கொள்கை வகுப்புக்கள் அதற்கான திட்டங்கள் தொடர்பாகவே இளைஞர் யுவதிகளுக்கு சிக்கல்கள் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்
சட்டத்துறை மாணவி மற்றும் மனித உரிமை துறையில் பணியாற்றும் ரஷ்மா என்ற யுவதி எம்முடன் கருத்து பகிர்கையில்,
இது ஒரு முக்கியமான ஆராயப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது. நாம் இலங்கையில் இலவசக் கல்வியை பெற்றோம். இலங்கையில் இலவச கல்வி, சுகாதார என்பன காரணமாகவே நாம் படித்து இந்த இடத்துக்கு வந்திருக்கிறோம். இலவச கல்வி, சுகாதாரம் இருந்திருக்காவிட்டால் நாங்கள் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டோம். எனவே அவ்வாறு இலவச கல்வி, சுகாதார வசதியை பெற்ற நாம் எமது நாட்டுக்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும். அதற்கு நான் திருப்பி ஏதாவது வழங்கியே ஆகவேண்டும். வெளிநாடுகளுக்கு குடி பெயர்ந்து செல்கின்றவர்கள் இதுதொடர்பாக சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இலங்கையில் படித்துவிட்டு மேற்படிப்புக்காக புலமைப்பரிசில் பெற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்கு செல்வது தவறில்லை. அவ்வாறு செல்வது தொடர்பில் நான் கூட சிந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். ஆனால் அவ்வாறு புலமைப்பரிசில் பெற்று உயர்கல்வி முடிந்ததும் தாய் நாட்டுக்கு திரும்பிவிட வேண்டும். இங்கு நாம் பெற்ற இலவச கல்வி சுகாதார சேவைக்காக நாம் இந்த நாட்டுக்கு எமது பங்களிப்பை வழங்க வேண்டும். மூளைசாலிகள் அதிகமாக நாட்டைவிட்டு வெளியேறி விட்டால் இலங்கையில் இந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு யார் இருக்க போகிறார்கள்? இதில் நம்பிக்கையை ஏற்படுத்துவது கொள்கை வகுப்பாளர்களின் கைகளில் இருக்கின்றது. ஆனால் எனக்கு அவ்வாறான நம்பிக்கை இல்லை என்றே நான் மிகவும் உண்மையில் கூறவேண்டும். அதனை நான் மறுக்க முடியாது. ஆனாலும் அந்த நிலைமை மாற்றமடைய வேண்டும். அதற்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன் என்று குறிப்பிடுகிறார்.
என்ன செய்ய வேண்டும்?
அந்தவகையில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் பல்வேறு நிலைப்பாடுகள் இருப்பதை காணமுடிகிறது. கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், தொழில் முயற்சியாளர்கள், இளைஞர் யுவதிகள் போன்றோரின் கருத்துக்களை மிக முக்கியமாக இருக்கின்றன. இவ்வாறான இளைஞர் யுவதிகள் ஆய்வாளர்கள் தொழில் முயற்சியாளர்கள் கல்வியாளர்கள் அடுத்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு திட்டங்களை வகுக்க கூடிய இயலுமை கொண்டிருக்கின்றனர். எனவே இவர்கள் என்ன நினைக்கின்றனர்? அவர்கள் எவ்வாறு இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்று கருதுகின்றனர்? என்பது மிக முக்கியமாகும்.
எனவே இது தொடர்பாக கொள்கை வகுப்பாளர்கள் தீர்மானம் எடுக்கும் தரப்பினர் கவனம் செலுத்த வேண்டிய அவசியம். எந்த ஒரு நாட்டுக்கும் நெருக்கடிகள் பொருளாதார பிரச்சினைகள் வருவது இயல்பாகும். ஆனால் அவற்றை எதிர்வு கூறி அவற்றுக்கு தீர்வு காணவேண்டும். இளைஞர் யுவதிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இளைஞர் யுவதிகளின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கும் அவர்களுக்கான சந்தர்ப்பங்களை பெற்றுக் கொடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வதன் ஊடாகவே இந்த நெருக்கடியை தீர்க்க முடியும். எனவே எந்தவொரு நெருக்கடியின் போதும் நாட்டை விட்டு வெளியேறுவது, நிரந்தரமாக வெளியேறி விடுவது குடிபெயர்ந்து விடுவது தீர்வல்ல.
ரொபட் அன்டனி