முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது.
கடந்த வருடம் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனவும் 12/06 /2022 அன்றைய நாளில் கட்டுமானம் எந்த நிலையில் காணப்பட்டதோ அதே நிலையை தொடர்ந்து பேணுமாறும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளையை ஆகியிருந்தது. இருந்த போதிலும் இந்த கட்டளையை மீறியும் தொடர்ந்து கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கட்டுமானப் பணியினை இராணுவத்தினர் முன்னெடுப்பதாகவும் இரவு வேளைகளில் குறித்த கட்டுமான பணிகள் இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் நேரில் பார்வையிடுவதற்க்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு 7.30 மணியளவில் குறித்த பகுதிக்கு விஜயம் செய்தனர்.
வழமையாக பகல் வேளையில் மக்கள் செல்லும் போது ஒழித்துக் கொள்ளும் இராணுவத்தினர் அங்கு சிக்கியுள்ளனர் இதன்போது, குருந்தூர் மலையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் முற்றுமுழுதான இராணுவ பிரசன்னத்துடன் காணப்பட்டுள்ளதுடன் இராணுவ சீருடையில் காணப்பட்டனர்.
குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் ஏராளமான சுண்ணாம்பு பக்கற்றுக்களும் கட்டுமான பொருட்களும் காணப்பட்டதோடு சுமார் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் தங்குவதற்கான வசதிகளுடன் கட்டில்கள் போடப்பட்டு மின்சார வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது அங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றபோது இந்த துண்டிக்கப்பட்டு அங்கு இருந்தவர்கள் காட்டுக்குள் ஓடியுள்ளார்.
குருந்தூர் குளத்திற்குள் இராணுவத்தை தவிர வேறு யாரும் மீன்பிடிக்கவோ குளத்திற்குள் பிரவேசிக்கவோ முடியாத நிலையில், பெருவாரியான மீன்களைப்பிடித்து கருவாடாக்கி கொண்டு செல்லுகின்ற செயற்பாடுகளும் இராணுவத்தால் மேற்கொள்ளப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . தீயில் சுடப்பட்டுக் கொண்டிருக்கின்ற குளத்து மீன்களும் ஏற்கனவே வத்தலாக்கப்பட்ட கருவாடுகளும் அங்கு காணப்பட்டுள்ளது.
எதிர்பாராத நேரத்தில் அங்கு சென்றமையினால் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி இடம்பெறும் வேலைத்திட்டங்களின் சூத்திரதாரிகள் மாட்டிக் கொண்டுள்ளனர். இவ்வாறான திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் தொடர்பில் மார்ச் மாதம் இடம்பெறும் ஐநா அமர்வுகளில் சர்வதேச சமூகத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.