தேர்தலுக்கு நிதி இல்லை! தமிழருக்கு நீதி இல்லை!

154 0

நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து எச்சரிக்கும் பாணியில் அதிகாரமிடும் ஜனாதிபதி ரணிலின் அரைவருடம் தாண்டிய சாதனைகள் என்ன? எதனைக் கேட்டாலும் இல்லை இல்லை என்றே கூறிக்கொண்டு, தனது கதிரையை எவ்வாறு மீளவும் கைப்பற்றுவது என்பதையே கனவிலும் நினைவிலும் கொண்டு இயங்குவதுதான் இவரின் ஒரேயொரு சாதனை.

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்ற பாடலுடன் இந்த வாரத்தை ஆரம்பிப்பது பொருத்தம்போலத் தெரிகிறது.

13வது திருத்தத்துக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை, உள்ளூராட்சித் தேர்தல் அகால மரணமடைந்திருப்பது, சுமந்திரனின் தமிழரசுக் கட்சி முஸ்லிம் காங்கிரஸிடம் அடமானத்துக்குள் சென்றிருப்பது, நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விளாசும் ஏகவசன சண்டித்தனம், எதிர்க்கட்சிகளுக்குள் புகுந்து அவற்றைச் சீர்குலைக்கும் அட்டகாசத்தின் அபாயம்…..

யானைக்கு மதம் பிடித்தால் என்னென்னவெல்லாம் நடக்குமோ அவையெல்லாம் தாராளமாக நடக்கின்றன. இவைகளைக் காண கண்கள் ஆயிரம் வேண்டும் என்பதுபோல, கேட்பதுக்கும் ஆயிரம் செவிகள் தேவைப்படுகிறது.

முழுமையாக 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது என்று சொன்னால், முழுமையாக அதனை இல்லாமல் செய்வது என்றொரு அர்த்தம் உண்டென்பது இப்போது தெரிய வந்துள்ளது. 13 பிளஸ் என்று சொல்லி வந்த மகிந்த ராஜபக்ச 13வது திருத்தச்சட்டம் தேவையில்லாத ஒன்று என்றவாறு சொல்லிவிட்டாரென்றால், மகாநாயக்கர்களின் கருத்து எவ்வளவு தூரம் அவரால் உள்வாங்கப்பட்டுள்ளதென்பதை புரிந்து கொள்ளலாம்.

இனி, ரணிலுக்கு வேலை சுலபமாகிவிடும். இதற்காகத்தான் 13ம் திருத்தத்தை எவ்வாறு நீக்கலாம் என்ற வழிமுறைகளையும் அவரே பகிரங்கமாகக் கூறியிருந்தார். 22ம் திருத்தத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதனூடாக 13ஐ நீக்கலாமென்ற அவரது முன்மொழிவை சிலவேளை மகிந்தவின் பொதுஜன பெரமுன கூட நிறைவேற்றலாம். அதற்கான கதவு திறக்கப்பட்டுவிட்டது.

இப்போது முக்கிய சமாசாரமாக இருப்பது மார்ச் 9ம் திகதி நடைபெறுமென கூறப்பட்ட உள்;ராட்சித் தேர்தல். நடக்கும், நடக்க விடப்படுமா, நடக்காது, முடிந்தால் நடத்திப் பார்க்கட்டும் என்ற நான்குமுனை பட்டி(யள்) மன்றம் முடிவுக்கு வந்துவிட்டதுபோல் தெரிகிறது. இதற்கும் இரண்டு காரணிகள் காட்டப்பட்டுள்ளன.

போதிய நிதி ஒதுக்கப்படாததால் தேர்தலை நடத்த முடியாதுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார். மறுதரப்பில், அறிவிக்கப்படாத தேர்தலை ஒத்தி வைக்கவோ, ரத்துச் செய்யவோ எதற்காக அறிவிக்க வேண்டுமென்ற பாணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் எதனைக் கூறினாலும் அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத பாதுகாப்பு இருக்கிறது என்ற காரணத்தினால்,  நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஜனாதிபதி ரணில் இப்படிச் சொன்னது அனைவரையும் நாடளாவிய ரீதியில் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது.

தேர்தல் ஆணைக்குழு என்பது சுயாதீனமாக இயங்கும் சட்டபூர்வமான ஓர் அரசாங்க அமைப்பு. சகல தேர்தல்களையும் நடத்தும் அதிகாரங்களைக் கொண்ட இந்த அமைப்பு காணாமல் போனோர் அலுவலகம் போன்ற ஏமாற்று நடவடிக்கைக்குரிய ஒன்றல்ல. இதன் உறுப்பினர்கள் சட்டரீதியாக இயங்கும் உரிமை பெற்றவர்கள். உள்;ராட்சித் தேர்தலை நடத்த அதிகாரபூர்வமாக அறிவித்து, வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தி, வேட்புமனுக்கள் தாக்கல் செய்து, தேர்தலுக்கான திகதியும் அறிவித்து, தேர்தலுக்கு எல்லாம் ரெடி என்ற தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் நீதிமன்றத்தில் அறிவித்த பின்னர்…..

நாட்டின் சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதி விட்டேந்தியாக, ‘தேர்தலுக்கு இதுவரை அரசாங்கம் அறிவிக்கவில்லை” என்று நாடாளுமன்றத்தில் கூறுவாரென்றால், இவர் சர்வாதிகாரியாக நடந்து கொள்கிறார் என்று எதிர்க்கட்சிகள் கூறுவதில் தவறு காண முடியாது. அதேசமயம், ரணில் ஜனாதிபதி என்ற வகையில் இவ்வாறு நடந்து கொள்வது அவரைப் பொறுத்தளவில் சரியாகவும் இருக்கலாம்.

சர்வ என்பதன் அர்த்தம் சகலதும் என்பது. சர்வூஅதிகாரம் என்பது சகல அதிகாரங்களையும் கொண்டவர் என்ற அர்த்தம் கொள்கிறது. 1978ல் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வந்து தம்மை சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதியாக்கிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ‘ஆணைப் பெண்ணாக்குவதையும், பெண்ணை ஆணாக்குவதையும் தவிர மற்றெல்லாவற்றையும் தம்மால் செய்ய முடியும்” என்று சொன்னதை, ரணில் 45 வருடங்களுக்குப் பின்னர் சகல நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற வகையில் செய்கிறார் என்றால் அதில் தவறு காணமுடியாது.

இவ்வாறு ஜனாதிபதி கூறிய பின்னரும், உள்;ராட்சித் தேர்தலை எப்போது நடத்துவது என்று மார்ச் மாதம் 3ம் திகதி தீர்மானிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளது வேடிக்கை விநோதமானது. அரசியமைப்பின் பிரகாரம் புதிய தேர்தல் ஆணைக்குழுவை நியமிக்கும் காலம் நெருங்குகிறது. நிமால் புஞ்சிஹேம தலைமையிலான தேர்தல் ஆணைக்குழுவின் ஆயுட்கால நாட்கள் எண்ணப்படுகின்றன. இதற்கிடையில் ரணிலுக்கும் நிமாலுக்குமிடையில் கயிறிழுப்பு நடைபெறுகிறது. இதில் வெல்லப் போவது யாரென்று ஸ்ரீமான் பொதுஜனங்களுக்கு நன்கு தெரியும்.

உள்ளூராட்சித் தேர்தல் இப்போதைக்கு இடம்பெறாது என்பது ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது. எண்ணாயிரம் வரையான உறுப்பினர்களை பொதுமக்கள் தங்கள் வாக்குகளால் தெரிவு செய்யும் அரிய வாய்ப்பு காணாமலாக்கப்படுகிறது.

தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் மாநகரசபைகளும், பிரதேச சபைகளும் விசேட ஆணையாளர் நிர்வாகத்தில் போகப்போகின்றன. இதனால் 8,000 வரையானவர்களின் சம்பளம் மீதமாகி, அரசாங்க உண்டியலுக்குப் போகப்போகிறது. மாகாண ஆளுனர்களுக்கு நல்வாய்ப்புக் காலம் தெரிகிறது.

தேர்தல் நிறுத்தப்படுவதால் பல நெருக்கடிகள் உருவாகும். தேர்தலில் பேட்டியிடவென மூன்று மாத சம்பளமற்ற லீவு எடுத்த அரசாங்க ஊழியர்களின் நிலைமை என்ன? தேர்தலின் ஆரம்ப வேலைகளுக்கென இதுவரை இறைக்கப்பட்ட500 மில்லியன் ரூபாவுக்கு யார் பொறுப்பு? தேர்தலுக்குப் போட்டியிட தாக்கலான 87,200 வேட்பாளர்களின் கட்டுப்பணத்தின் நிலை என்ன? மீளளிக்கப்படுமா? குறிப்பிட்ட காலத்தில் தேர்தல் நடைபெறாது போகுமானால் கட்டுப்பணம் இழக்கப்படுமென அஞ்சப்படுகிறது. செத்தும் கொடுத்தான் சீதக்காதி போன்று வேட்பார்கள் அரசாங்கத்தின் நிதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வார்களா?

ஏற்கனவே தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்ட வேட்பாளர்களும் அவர்களின் தொண்டர்களும் ஆங்காங்கே சின்னச்சின்ன அறகலயவை ஆரம்பித்துள்ளனர். தேர்தல் நடத்தாவிட்டால் வீதிகளில் இறங்குவோமென முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறைகூவியுள்ளார். ரணில் ஜனாதிபதியான நாளிலிருந்து இதனையே  தாம் செய்து வருகிறேன் என்பது அவருக்குத் தெரியவில்லையா? தேர்தலை நிறுத்தக்கூடாது – நடத்த வேண்டுமென்று தாம் விரும்புவதாக மகிந்த ராஜபக்சவும் தமது பங்குக்கு மென்போக்கில் கூறியுள்ளார்.

தமிழரசு எம்.பி. சுமந்திரன் கொஞ்சம் மேலேறி – சட்டத்தின் ஆட்சியை, குறைத்து மதிப்புக்குட்படுத்தும் எந்தவொரு முயற்சிக்கும் இடமளிக்க முடியாது என்று ரணிலை எச்சரித்துள்ளார். நல்ல விடயம். ஆனால் ஒரு சந்தேகம். தற்போது ரணிலின் அரசாட்சி சட்டத்துக்கு உட்பட்டு இடம்பெறுகிறது என்று சுமந்திரன் எவ்வாறு கூற முடியும்? ரணில் யாழ்ப்பாணம் சென்ற வேளைகளில், முக்கியமாக சுதந்திர தினம் கொண்டாடப் போனவேளை அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களையும் பொதுமக்களையும் படையினர் நடத்திய அராஜக தாக்குதல் சட்டத்துக்கு உட்பட்டது என்று சுமந்திரன் கருதுகிறாரா?

நல்லாட்சிக் காலத்தில் ரணிலுக்கு வக்காலத்து வாங்கிய பழக்கதோசத்தில் இ;ன்னமும் அதே வசனங்களை சுமந்தினர் பிதற்றுவதை காணமுடிகிறது.

இவை ஒருபுறம் போகட்டும். தேர்தல்கள் அடுத்த வருடம் எனவும், அப்போது மக்கள் தாம் விரும்பும் ஆட்சியை ஏற்படுத்தலாமென்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியதன் அர்த்தம் என்ன? மொத்தம் நான்கு தேர்தல்கள் – உள்;ராட்சித் தேர்தல், மாகாணசபைகளின் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பவை வரிசையில் காத்திருக்கின்றன. முதலிரண்டு தேர்தல்களும் எப்போது என்பது ரணிலைத் தவிர வேறெவருக்கும் தெரியாது.

அரசியலமைப்பின் பிரகாரம் பெப்ரவரி 20ம் திகதி நாடாளுமன்றம் இரண்டரை ஆண்டுகளை பூர்த்தி செய்து விட்டதால் அதனை எந்த வேளையிலும் கலைக்கும் அதிகாரம் ரணிலின் கைக்கு வந்துவிட்டது. அடுத்த வருடத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி தமது கதிரையை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்தில் ரணில் இருக்கிறார். எனவே மற்றைய தேர்தல்கள் பற்றிச் சிந்திப்பவர்கள், அதனை ஜனாதிபதித் தேர்தல்வரை ஒத்தி வைப்பதே புத்திசாலித்தனமானது.

இந்தப் பின்னணிகளில் அரையாண்டைக் கடந்துவிட்ட ரணிலின் ஜனாதிபதி ஆட்சியின் சாதனைகளை சுருங்கக் கூறுமாறு கேட்டால் இப்படித்தான் கூற முடியும்!  தேர்தலுக்கு நிதி இல்லை! தமிழருக்கு நீதி இல்லை! ரணிலிடம் நேர்மை இல்லை! அவ்வளவுதான்.

பனங்காட்டான்