சிறுதானியங்களைக் கொண்டு மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்பு – தேசிய விருதுக்கு விருதுநகர் விவசாயி தேர்வு

153 0

சிறுதானியங்களைக் கொண்டு மதிப்புக் கூட்டுப் பொருட்களைத் தயாரித்து வரும் விருதுநகரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார், இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் வழங்கும் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக ஐநா அறிவித்துள்ளது. தமிழகத்தில் சிறுதானிய உற்பத்தியில் விருதுநகர் மாவட்டம் முதன்மை மாவட்டமாக விளங்குகிறது. கம்பு, சோளம், தினை, கேழ்வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் இங்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. விருதுநகர் அருகே உள்ள தாதம்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற விவசாயி, இயற்கை விவசாயம் மூலம் சிறுதானியங்களை உற்பத்தி செய்வதோடு அதில் பல்வேறு விதமான மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை நவீன இயந்திரங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்து வருகிறார்.

சிறுதானியங்கள் மூலம் முளைகட்டி தயாரிக்கப்படும் சத்துமாவுடன் பருப்பு வகைகள், மூலிகைகள், ஸ்பைருலினா போன்றவற்றை கலந்து மதிப்புக் கூட்டப்பட்ட ரொட்டி வகைகள், தனி அவல், அவல் மிக்சர், சிறுதானிய கூழ், சிறுதானிய லட்டு போன்றவற்றை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறார். அதோடு, சாமை சைவ பிரியாணி, வரகு புளியோதரை, பனிவரகு, எலுமிச்சை சாதம், தினை தேங்காய் சாதம், குதிரைவாலி தயிர் சாதம் போன்ற உணவு வகைகளை தயாரித்து தனியார் மற்றும் அரசு விழாக்களுக்கு வழங்கி வருகிறார்.