தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள், டான்சீட் திட்டத்தின் மூலம் மாநிய நிதி பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ”தமிழ்நாடு அரசின் டான்சீட் (TANSEED) திட்டமானது, தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவும் விதமாக வடிவமைக்கப்பட்டு இதுவரை நான்கு பதிப்புகள் மூலம் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 5ஆம் பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
டான்சீட் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, இதுவரை 84 புத்தொழில் நிறுவனங்களுக்கு மானிய நிதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஐந்தாம் பதிப்பு முதல் இத்திட்டம் 3% அளவிலான சிறு பங்கை தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) எடுத்துக்கொள்ளும் வகையில் மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பதிப்பின் மூலமாக மேலும் 50 புத்தொழில் நிறுவனங்கள் பயன்பெற தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.
பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாகக் கொண்ட புத்தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகைத்தொகுப்பிற்கான அரசாணைக் குறிப்பேட்டினை டிசம்பர் 30, 2022 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி புத்தொழில் நிறுவனங்களுக்கு டான்சீட் நிதி 10 லட்சம் ரூபாயிலிருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாகக் கொண்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சமும், இதர துறை சார்ந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சமும் பங்கு முதலீடு வடிவத்தில் நிதி வழங்கப்பட உள்ளது. மேலும் பெண்களை முதன்மை பங்கு தாரர்களாகக் கொண்ட நிறுவனங்களுக்கு மொத்த திட்ட இலக்கில் 25 சதவீதமும் ஊரக வாழ்வாதார மேம்பாட்டுக்கான புத்தொழில் நிறுவனங்களுக்கு 10 சதவிகிதமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தேவைகளுக்கான புத்தாக்க அடிப்படையிலான தீர்வுகளை வடிவமைத்து பெரும் சந்தை மதிப்பீடுகளை உருவாக்கக்கூடிய மற்றும் வருங்காலங்களில் அதிகளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் மாதிரிகளுடன் சமூகத்தில் நன்மாற்றங்களை விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடிய புத்தொழில் நிறுவனங்கள் யாவும் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டினை தலைமையகமாகக் கொண்டிருக்க வேண்டும். மேலும், இந்திய அரசின் DPIIT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தகுதியான நிறுவனங்கள் www.startuptn.in இணையதளத்தின் வழியே, மார்ச் 5, 2023 க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள விரும்பினாலும், ஏதேனும் வினாக்கள் இருந்தாலும் tanseed@startuptn.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.