உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுங்கள்: மாதேசிகளுக்கு அழைப்பு விடுத்த நேபாள பிரதமர்

288 0

நேபாளத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும்படி மாதேசி கட்சிகளுக்கு பிரதமர் பிரசண்டா அழைப்பு விடுத்துள்ளார்.

நேபாளத்தில் புதிய அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாதேசி சமுகத்தினர் 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஆண்டு பிப்ரவரி வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர். இப்போராட்டத்தின்போது நடந்த வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது நேபாளத்தில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மே 14-ம் தேதி உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மாதேசி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் பிரசண்டா தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, உள்ளாட்சித் தேர்தலில் மாதேசி கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மாதேசி சமூகத்தினர் தங்கள் பிரச்சினைகளை எழுப்ப இந்த தேர்தல் ஒரு வாய்ப்பு என்பதால், அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாதேஸ் பகுதியில் உள்ள எதிர்ப்பு கட்சிகளை பயன்படுத்தி சில பிரிவினைவாத சக்திகள் நாட்டை பிரிக்க முயற்சிப்பதாகவும், அதுபோன்ற நடவடிக்கைகளை எந்த சூழ்நிலையிலும் அரசு சகித்துக்கொள்ளாது என்றும் எச்சரித்துள்ளார்.உள்ளாட்சித் தேர்தலுடன், அரசியலமைப்பு சட்டத்திருத்த நடைமுறைகளும் தொடங்கும் என்றும் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.