ஜனாதிபதி அரசியலமைப்பை பாதுகாப்பதாக இருந்தால் ஆரம்பமாக மக்களின் ஜனநாயக உரிமையான தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை வழங்கவேண்டும். அத்துடன் பாராளுமன்றத்துக்குள் ஒருசிலர் தெரிவித்ததற்காக தேர்தல் ஆணைக்குழுவை மாற்ற முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
முல்லைத்தீவு பிரதேசத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நிறைவேற்று ஜனாதிபதி உட்பட எவருக்கும் அரசியலமைப்பை மீறி செயற்படுவதற்கு உரிமை இல்லை. அதனால் தேர்தலை நிறுத்தி அரசியல் கோழைத்தனத்துக்கு தயாராக வேண்டாம் என ஜனாதிபதிக்கு தெரிவிக்கிறோம்.
வாக்குரிமை என்பது அரசியலமைப்பினூடாக மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமையாகும். அதில் யாருக்கும் கைவைக்க முடியாது. நிறைவேற்று ஜனாதிபதிக்கும் அதில் கைவைக்க முடியாது.
அத்துடன் நாட்டில் தேர்தல் ஒன்று இல்லை என யானை, மொட்டு கூட்டணி அரசாங்கத்தின் ஜனாதிபதி தெரிவிக்கிறார்.
அவர் இந்த நாட்டு ஜனாதிபதி அல்ல. அவர் செவ்வாய் கிரகத்தின் ஜனாதிபதி. அவர் அரசியலமைப்பை பாதுகாப்பதாக இருந்தால் அரசியலமைப்பில் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்களிக்கும் உரிமையை பாதுகாப்பதற்காக தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை வழங்கவேண்டும்.
தேர்தலுக்கு அச்சப்படாமல் மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு எதனையும் செய்யலாம் என ஜனாதிபதி நினைத்தால் அதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை.
மேலும், தேர்தல் ஆணைக்குழுவை மாற்றியமைப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். பாராளுமன்றத்தில் இரண்டு பேர் அதனை பிரேரித்து வழிமொழிந்திருக்கிறார்கள்.
பாராளுமன்றத்துக்குள் பிரேரித்து வழிமொழிந்தமைக்காக நாட்டின் தேர்தல் ஆணைக்குழுவை மாற்றியமைக்க முடியுமா என கேட்கிறேன். அதனால் பாராளுமன்றத்துக்குள் நகைச்சுவை, நாடகமாட வேண்டாம்.
அத்துடன் வடக்கில் யுத்தம் முடிவடைந்தவுடன் வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்துவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஆனால், அவர் வடக்கில் வசந்தத்துக்கு பதிலாக இனவாத, மதவாதத்தை ஏற்படுத்தி, நாட்டை வங்குரோத்து அடையச் செய்தார். இதனைத்தான் இவர்கள் இந்த நாட்டுக்காக செய்திருக்கிறார்கள்.
மோதலும் யுத்தமும் இருந்த எமது நாட்டில் யுத்தம் முடிவடைந்தாலும் நல்லிணக்கம் என்பது கெட்ட வார்த்தையாக மாறியுள்ளது. இன, மத வேறுபாடுகளை உருவாக்கியதன் விளைவாகவே எமது நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த வங்குரோத்து நிலைக்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் பேர்கர் என்ற பாகுபாடு இல்லை என்பதால் அனைத்து இன, மதத்தினரும் இணைந்து இந்த வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல ஒன்றிணைய வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இன, மத பேதங்களை தூண்டி நாட்டை அழிக்கும் நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.
சாதி, மத பேதங்களை ஒதுக்கிவிட்டு, நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய முன்வரவேண்டும் என்றார்.