மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராகுவதால் நாட்டின் நெருக்கடி தீர்ந்துவிடுமா என எதிர்க் கட்சி கேள்வி

97 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்குவதால், நாட்டின் பொருளாதார நெருக்கடி தீர்ந்துவிடுமா என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதா இல்லையா என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. எனினும் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராகிவிட்டால் நாட்டின் பிரச்சினை தீர்ந்துவிடுமா என்றே நாம் கேட்கின்றோம்.

நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து யதார்த்த நிலைமைக்குக் கொண்டுவருவதற்கு சிறந்த திட்டங்களே முதலில் அவசியமாகும்.

நாடு இன்று எதிர்கொண்டு இருக்கும் பாரிய பிரச்சினை என்ன? போதியளவிலான டொலர் கையிருப்பில் இல்லை.

அந்நிய செலாவணியை அதிகரிக்க வேண்டும். அதற்காக விரைவான வேலைத்திட்டங்களுக்குச் செல்ல வேண்டியது அவசியமாகும்.

தேர்தலை எதிர்பார்த்து நாம் எமது கட்சியை கட்டியெழுப்பும் பணிகளை முன்னெடுக்கவில்லை.

அடுத்த வருடம் தேர்தலுக்கான வருடமாக அமையும் என்றும் நாம் நம்பிக்கைக் கொண்டுள்ளோம். ஏனெனில், மக்கள் ஆணையின்றி இந்த அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக பயணிக்க முடியாது.

மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டே அரசாங்கம் பயணிக்க வேண்டும்.

நாட்டு மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. பிரச்சினைகள் இன்னும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

எனவே, இந்த அரசாங்கத்தை மாற்றியமைப்பதே ஒரே ஒரு வழியாக இருக்கும்.

எனவே தேர்தல் நடைபெற்றாலும் நடைபெறாவிட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி என்ற முறையில் அடிமட்டத்திலிருந்து எமது கட்சியை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்.

தேர்தலை பிற்போடுமாறு எமது கட்சியை சேர்ந்த சிலர் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி கூறிய கருத்து முற்றிலும் பொய்யானது.

தேர்தலை பிற்போடுமாறு யார் கூறினார்கள் என்று ஜனாதிபதி பெயரைக் குறிப்பிட்டுக் கூறியிருக்கலாம். யார் அவ்வாறு கோரிக்கை விடுத்தார்கள் என்றே நாம் கேட்கின்றோம்.

ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது வேறு எந்தக் கட்சியோ தேர்தல் வேண்டாம் என்று ஒருபோதும் கோரப்போவதில்லை.

தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.