ஆறு ஆண்டாக கிடப்பில் போடப்பட்டு இருந்த மதுரவாயல் பறக்கும் சாலை பணிகள் விரைவில் துவங்குகிறது.
ஜெயலலிதா ஆட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்ட சென்னை துறைமுகம்-மதுரவாயல் சாலை பணிகள், ஈசிஆர் சாலை விரிவாக்கம், மதுரை வெளிவட்ட சாலை ஆகிய 3 திட்டப்பணிகளுக்கு, மத்திய அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப்
பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2 நாள் பயணமாக டெல்லி சென்றார். நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு திட்டங்களுக்கு நிதி கேட்டார். மேலும் வர்தா புயல், வறட்சி நிவாரண நிதி உள்ளிட்ட நிதிகளை மத்திய அரசு உடனே ஒதுக்கித்தரும்படி வேண்டுகோள் விடுத்தார். நேற்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்தார்.
அப்போது சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள், வீடுகள் திட்டம், 2015 வெள்ள பாதிப்பு மேம்பாட்டு திட்டம், குடிசை மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்து அவரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார். இதை வெங்கையா நாயுடுவும் உறுதிப்படுத்தினார். இந்த திட்டங்கள் நிறைவேற்ற மத்திய அரசின் ஒப்புதலை தமிழக அரசு கேட்டு இருப்பதாக அவர் ெதரிவித்தார். அதை தொடர்ந்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்தார். அப்போது மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார். இந்த சந்திப்பின் போது சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், மதுரை உள்வட்ட ரிங்ரோடு, கிழக்குகடற்கரை சாலை 4 வழித்திட்டம் ஆகியவற்றை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் தமிழகத்தில் உள்ள 700 கிமீ சாலைகளை தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துறையிடம் ஒப்படைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், “மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்த மதுரவாயல் பறக்கும் சாலை திட்டப்பணிகளை விரைவில் மேற்கொள்ளும். அந்த பணிகள் எவ்வளவு விரைவாக தொடங்க முடியுமோ அவ்வளவு விரைவாக தொடங்கப்படும்” என்றார். மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கூறுகையில்,”மாநில அரசின் ஒத்துழைப்புடன் இனயம் துறைமுக திட்டம் நிறைவேற்றப்பட்டால் மீனவர்கள் இங்கிருந்தே ஏற்றுமதி செய்யலாம். தற்போது கொச்சிக்கு சென்று ஏற்றுமதி செய்து வருகிறார்கள். எனவே இனயம் பகுதி மீனவர்களிடம் இந்த பிரச்னை குறித்து விளக்கப்படும். அதன் அடிப்படையில் இந்த பிரச்னையை மத்திய அரசு தீர்த்து வைக்கும். திட்டமிட்டபடி பணிகள் நடைபெறும்.
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் மதுரை வெளிவட்ட சாலை திட்டத்துக்கும் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது” என்று அவர் தெரிவித்தார். இறுதியாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். அப்போது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கேட்டுக்கொண்டார். அதில் நிதின்கட்கரியை சந்தித்தபோது, எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதல் வழங்கிய 3 திட்டங்களும், ஜெயலலிதா அரசால் முடக்கி வைக்கப்பட்ட திட்டங்களாகும். அதில் துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் 2009ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது தொடங்கப்பட்டது. அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை சுமார் 19 கி.மீ.தூரம் இந்த பறக்கும் சாலை 4 வழித்தடத்தில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ரூ.1530 கோடியும் ஒதுக்கப்பட்டது. கூவம் ஆற்றின் கரை ஓரமாக திட்டம் செயல்படுத்த, தீவிரமாக வேலைகள் நடைபெற்று வந்தன. ஆனால், 2011ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இந்த திட்டத்தை ஜெயலலிதா நிறுத்தி வைத்தார். கடந்த 6 ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இப்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, தற்போது இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடற்கரை ஓரமாக கிழக்கு கடற்கரை சாலையில் 10 ஆயிரம் கோடி செலவில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கும் தமிழக அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டமும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதேபோலத்தான் தமிழக அரசு நிறுத்தி வைத்திருந்த மதுரை வெளிவட்ட சாலைக்கும் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜெயலலிதா அரசால் கிடப்பில் போடப்பட்ட திட்டத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு ஒப்புதல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
* துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் 2009ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது தொடங்கப்பட்டது.
* துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை சுமார் 19 கி.மீ.தூரம் இந்த பறக்கும் சாலை 4 வழித்தடத்தில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ரூ.1530 கோடியும் ஒதுக்கப்பட்டது.
* கூவம் ஆற்றின் கரை ஓரமாக திட்டம் செயல்படுத்த, தீவிரமாக வேலைகள் நடைபெற்று வந்தன.
* ஆனால், 2011ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இந்த திட்டத்தை ஜெயலலிதா நிறுத்தி வைத்தார். கடந்த 6 ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் போடப்பட்டது.