கடந்த காலங்களில் தேர்தலை பிற்போடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் தற்போது வெற்றியடைந்துள்ளன. தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்களை வலுவிலக்கச் செய்து, அதன் சுயாதீன தன்மை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தேர்தல்களை பிற்போடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஜனாதிபதியால் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
தொடர்ச்சியாக தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தபோதிலும் அதனை பொருட்படுத்தாமல் தேர்தல் பிற்போடப்பட்டிருக்கிறது.
ஜனநாயக உரிமையான தேர்தலை உரிய காலத்தில் நடத்துமாறு மேற்கொண்ட போராட்டத்தை அரசாங்கம் எவ்வாறு கையாண்டது என்பது எங்களுக்கு தெரியும். எதிர்க்கட்சியால் அண்மையில் கொழும்பில் மேற்கொண்ட போராட்டத்தின்போது பொலிஸாரை குண்டர்களை போல பயன்படுத்தினார்கள்.
இவ்வாறான அரசாங்கத்தின் கடுமையாக போக்குகள் சுயாதீனமாக செயற்படக்கூடிய தேசிய தேர்தல் ஆணைக்குழுவை தாக்குப்பிடிக்க முடியாத நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது.
மேலும், இல்லாத தேர்தலை எவ்வாறு நடத்த முடியும் என்று ஜனாதிபதி கேள்வி எழுப்புவது வேடிக்கையாகும். அவ்வாறு கூற முடியாது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் திகதியை ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
அதன் பின்னர் தேர்தலை பிற்போடுமாறு நிதியமைச்சின் செயலாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தேர்தலை பிற்போடுமாறு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும்போது எவ்வாறு ஜனாதிபதியால் தேர்தலொன்று இல்லை என்று கூற முடியும்.
பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி வேட்புமனு தாக்கல் செய்தன. இவற்றை எல்லாம் பார்க்கும் தேர்தல் ஒன்று இருந்ததால் தானே வேட்புமனு தாக்கல் செய்யப்படலாம், அச்சடிக்கும் பணிகள் இடைநிறுத்தவோ தேர்தலுக்கு நிதி இல்லை என்று கூறவோ முடியும்.
சுயாதீன ஆணைக்குழு என்பது பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட குழுவொன்றாகும். ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் கீழ் இயங்கக்கூடிய ஒன்றாகும்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு செயற்பட்ட விதம் சட்ட ரீதியானது அல்ல என்று கூறினால் அவர் என்ன செய்திருக்க வேண்டும். நாட்டின் தலைவர் என்ற வகையில் ஆணைக்குழுவை அழைத்து, ஆணைக்குழு மேற்கொண்ட தவறுகளை சுட்டிக்காட்டி, அதனை திருத்தி, தேர்தல் நடத்துவதற்கான வழிவகைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும், நாட்டுக்கு தேர்தல் தேவை, மக்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கருதியிருந்தால் தேர்தல் இடம்பெற்றிருக்கும். ஆனால், சகல அதிகாரங்களை தன் வசம் வைத்துக்கொண்டு ஆணைக்குழுவினை வலுவிழக்கச் செய்து அவர்கள் மீது குற்றம் சுமத்தி, இன்று தேர்தலையே இல்லாமல் செய்திருக்கிறார் என்றார்.