தேர்தல்கள் ஆணைக்கு உயர்நீதிமன்றத்திற்கு அளித்த வாக்குறுதிக்கு அமைவாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக நடத்த வேண்டும்.
அவ்வாறு இல்லாது விட்டால் உயர்நீதிமன்றத்தினை மீண்டும் நாடவேண்டியேற்படும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்த மார்ச் 9அம் திகதி தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடொன்றுக்கு தேர்தல் என்பது மிகவும் அத்தியாவசியமானதொரு விடயம். அந்நாடு ஜனநாயக நாடா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு, உரிய காலத்திலே தேர்தல்கள் கிராமமாக நடத்தப்படுவது முக்கியமானதொரு அம்சமாகும்.
உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல் மிகவும் முக்கியமானதொரு மக்கள் கருத்துக்கணிப்பாகவே நோக்கப்படுகிறது. நாட்டு மக்களின் அரசியல் நோக்கம் என்ன என்பது இந்த தேர்தல் ஊடாக வெளிப்படவுள்ளது.
தேர்தல்களை நடத்தாது பிற்போடுவது, என்பது நாட்டின் சுபாவத்தை மாற்றி விடும். உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தலொரு அத்தியாவசியமற்ற தேவை என்று ஜனாதிபதி கூறுவதை நாங்கள் மறுக்கிறோம்.
ஜனநாயக நாடு என்கின்ற சுபாவத்தை நாங்கள் தொடர்ந்து பேணுவதாக இருந்தால் தேர்தல் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும். அதை தேர்தல் ஆணைக்குழு செய்யுமென எதிர்பார்க்கிறோம்.
அதேநேரம், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், உரிய காலத்தில் தேர்தலை நடத்தவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே உயர் நீதிமன்றத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளது.
அந்த அடிப்படையில் தான் உயர்நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்கும் பணிகளின் அடிப்படையில் குறித்த மனுவை தள்ளுபடி செய்திருக்கின்றது. ஆகவே, தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அளித்த வாக்குறுதிப்படி தேர்தலை நடத்த வேண்டியது கட்டாயமாகின்றது. அவ்வாறு இல்லாது விட்டால் உயர்நீதிமன்றத்தினை நாடுவோம் என்றார்.