முல்லைப்பெரியாறு அணையில் மார்ச் 3-ம் தேதி ஐவர் குழு ஆய்வு

315 0

முல்லைப்பெரியாறு அணையில் மார்ச் 3-ம் தேதி துணைக்கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் மூலம் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை,  சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பாசன வசதியை பெறுகின்றன. தமிழக, கேரள மக்களின் முக்கிய நீராதாரமாக  முல்லை பெரியாறு அணை இருந்து வருகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு  வருகிற அதே நேரத்தில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தமிழக, கேரள மக்களின் நீராதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையை வரும் மார்ச் 3-ஆம் தேதி ஐவர் குழுவினர் ஆய்வு  செய்ய உள்ளனர். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியதன் பேரில் ஐவர் குழு  அமைக்கப்பட்டது. இந்த ஐவர் குழுவினர் 6 மாதங்களுக்கு ஒருமுறை அணையில் ஆய்வு நடத்துவர்.

அதன்படி, 5 மாதங்களுக்குப் பிறகு ஐவர் கொண்ட துணைக்கண்காணிப்பு குழு ஆய்வு செய்ய உள்ளது. இதில் அணையின் நீர்மட்டம்,  நீர்வரத்து, வெளியேற்றம், மழைப்பதிவு பற்றி ஆய்வு செய்ய உள்ளது. மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் அசோக்  தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆய்வில் தமிழக பொதுப்பணித்துறை, கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளும் பங்கேற்க  உள்ளனர்.