தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது

312 0

பிளஸ்-2 தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

பிளஸ்-2 தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது. மார்ச் மாதம் 31-ந்தேதி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது.

பிளஸ்-2 தேர்வை 6,737 பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 17 ஆயிரத்து 952 மாணவர்களும், 4 லட்சத்து 80 ஆயிரத்து 810 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும், தனித்தேர்வர்களாக 31 ஆயிரத்து 843 பேரும், சிறைக்கைதிகள் 88 பேரும் எழுதுகிறார்கள். மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரத்து 606 பேர் எழுதுகின்றனர்.

இவர்களில் 5 லட்சத்து 69 ஆயிரத்து 304 பேர் தமிழ் மொழியில் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ்-2 தேர்வுக்காக 2,427 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பார்வையற்றவர்கள், காதுகேளாதோர், வாய் பேசாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமனம், கூடுதலாக 1 மணி நேரம்) அளிக்கப்படுகிறது.

தேர்வை சிறப்பாக நடத்த அனைத்து மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையை சேர்ந்த இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று தேர்வுக்காண பணிகளை செய்து வருகிறார்கள்.

தேர்வு மைய வளாகம் செல்போன்கள் தடை செய்யப்பட்ட பகுதியாகும். தேர்வு எழுதும் மாணவர்கள் யாரும் செல்போனை கொண்டு வரக்கூடாது. இதைமீறி மாணவர்களோ, ஆசிரியர்களோ செல்போன் அல்லது இதர தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்பதாக கண்டறிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தேர்வின்போது துண்டு தாள் வைத்திருத்தல், பார்த்து எழுதுதல், ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக 2 வருடம் சிறை தண்டனை வழங்கப்படும்.

ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, அல்லது அவர்களை ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயற்சி செய்தால் அந்த தேர்வு மையத்தை ரத்து செய்து பள்ளியின் அங்கீகாரத்தை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அல்லது மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி ரத்து செய்வார்.சென்னை மாவட்டத்தில் மட்டும் 56 ஆயிரத்து 125 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதுகிறார்கள்.

இந்த ஆண்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் விடைத்தாள் திருத்தம் செய்வதற்கு போதுமான காலஅவகாசம் அளித்தே இந்த தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.