ஜனாதிபதி மற்றும் தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகவும், இதனால் தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் மாத வருமானம் பெறுபவருக்கு ஜனவரி முதல் 36 வீதம் வரை வரி அறவிடும் கொள்கைக்கு தொழில் வல்லுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்ற நிலையிலேயே, நேற்று மாலை அது தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது, நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டியது அத்தியாவசியமானது எனவும், அவர்களது சில நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது என்றும் திறைசேரி செயலாளர், ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் உள்ளிட்டோரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அலுவலர்கள் சங்கம், துறைமுகம், மின்சாரம், நீர் வழங்கல், வங்கிகள், பெற்றோலியம், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட 40 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.