கியூபாவில் பற்றி எரியும் காட்டுத் தீ ; கட்டுப்படுத்த முடியாமல் திணறும் வீரர்கள்

111 0

கியூபாவில் ஒரு வார காலமாக கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

ஹோல்குயின் மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை பரவிய காட்டுத் தீ சுமார் 2 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில், பற்றி எரிந்து வருகிறது.

கியூபா பாதுகாப்புப் படையின் தீயணைப்பு வீரர்கள் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் மூலம் தீயைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். காட்டுத் தீயால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாகவும், வானம் செந்நிறமாகவும் காட்சியளித்தது.


REUTERS/Juan Pablo Carreras

வனத் தோட்டங்கள் மற்றும் கோப்பி பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, வனவிலங்குகள் மற்றும் தாவரங்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என கியூபாவின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் ரெய்னியர் ராமிரெஸ் தெரிவித்துள்ளார்.

கியூபாவில் ஏற்கனவே ஜனவரி மாதத்தில் 80 காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு மண்டலத்தில் உள்ள பினார் டெல் ரியோ மற்றும் ஆர்டெமிசா மற்றும் நாட்டின் மத்திய-கிழக்கு பகுதியில் உள்ள காமகுய் மற்றும் ஹோல்குயின் ஆகியவை காட்டு தீயினால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.