பொதுச்செயலாளராக பதவி விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு சசிகலா பதில் கடிதம்

282 0

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் தேர்தல் கமிஷனில் அளித்த புகார் மனுவுக்கு சசிகலா நேற்று பதில் கடிதம் அனுப்பினார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் தேர்தல் கமிஷனில் அளித்த புகார் மனுவுக்கு சசிகலா நேற்று பதில் கடிதம் அனுப்பினார்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன்பிறகு கட்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அமைச்சர் செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோருக்கு பதவிகள் வழங்கப்பட்டன. புதிய முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார்.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றது செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக, மைத்ரேயன் எம்.பி. தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியிடம் புகார் மனு அளித்தனர்.

அதில், ‘அ.தி.மு.க.வின் கட்சி விதிமுறைகளில் தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது. எனவே, சசிகலா பொதுச்செயலாளர் ஆனதை செல்லாது என்று அறிவிப்பதுடன் அவர் செய்த புதிய நியமனங்கள், நிர்வாகிகள் நீக்கம் ஆகியவற்றையும் ரத்துசெய்ய வேண்டும். மேலும் துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டதையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இதை பரிசீலித்த தேர்தல் கமிஷன், இது தொடர்பாக பிப்ரவரி 28-ந்தேதிக்குள் (நேற்று) விளக்கம் அளிக்குமாறு பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நோட்டீசு அனுப்பியது.

அதன்படி தேர்தல் கமிஷன் அளித்த கெடு நாளான நேற்று சசிகலா சார்பில் அவருடைய வக்கீல்கள் செந்தில், பாண்டியன், ராகேஷ் சர்மா ஆகியோர் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் பதில் கடிதத்தை அளித்தனர். அந்த கடிதம் 72 பக்கங்களை கொண்டது என்றும் அவர்கள் செய்தியாளர் களிடம் தெரிவித்தனர்.

அந்த கடிதத்தில் சசிகலா அளித்த பதிலின் சுருக்க விவரம் வருமாறு:-

அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செயலாளராகவே சசிகலா நியமிக்கப்பட்டு உள்ளார். பொதுச்செயலாளர் இல்லாத நிலையில் தற்காலிக பொதுச்செயலாளரை நியமிக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு உண்டு. அதன்படியும், கட்சி சட்ட விதிகளுக்கு உட்பட்டுமே நியமனங்கள் நடந்துள்ளன.

சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் புகார் அளித்த மைத்ரேயன் எம்.பி. மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அதற்கு ஆதரவு தெரிவித்து முன்மொழிந்து உள்ளனர். இந்நிலையில் அவர்கள் புகார் அளித்து இருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. எனவே, அந்த புகாரை ஏற்றுக்கொள்ளக்கூடாது.இவ்வாறு கூறப்பட்டிருந்தது.