9 நாடுகளின் சுற்றுலாப்பயணிகளை உள்ளீர்த்துக்கொள்வதில் விசேட அவதானம்

116 0

இவ்வாண்டில் இந்தியா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளடங்கலாக இலங்கைக்கு பெருமளவு சுற்றுலாத்துறைசார் வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய 9 நாடுகளின் சுற்றுலாப்பயணிகளை உள்ளீர்த்துக்கொள்வதில் வெகுவாகக் கவனம் செலுத்தியிருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டுப்பணியகத்தின் தலைவர் சாலக கஜபாகு தெரிவித்துள்ளார்.

‘நாட்டின் சுற்றுலாத்துறை மேம்பாட்டைப் பொறுத்தமட்டில் நாம் பூகோள ரீதியிலான பிரசாரத்துக்குச் செல்லப்போவதில்லை. மாறாக 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்கை அடைந்துகொள்வதை முன்னிறுத்தி, இலங்கைக்கு அதிக சுற்றுலாத்துறைசார் வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய 9 நாடுகளின் உள்ளீர்த்துக்கொள்வதில் விசேட கவனம்செலுத்தியுள்ளோம்’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகளவில் செலவிடக்கூடிய சுற்றுலாப்பயணிகளைக்கொண்ட இந்தியா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, மத்திய கிழக்கு நாடுகள், நோர்டிக் நாடுகள் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய 9 நாடுகளே இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டுப்பணியகத்தின் விசேட அவதானத்திற்குரிய நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருப்பதுடன், எதிர்வரும் மேமாதம் முதல் அந்நாடுகளின் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்குரிய பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இலங்கையானது இவ்வாண்டு சுமார் 1.55 மில்லியன் சுற்றுலாப்பயணிகளின் வருகையை அடைந்துகொள்வதற்கும், சுற்றுலாத்துறையின் ஊடாக 2.88 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கும் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.