நிதி தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்திடமே காணப்படுகின்றது. அதன் அடிப்படையில் உள்ராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு தலையீடு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவாவினால் , சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் கடிதம் மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிக்கையில் ,
நிதி தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்திடம் காணப்படுவதனாலும் , நிதி ஒதுக்கீடு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமையின் காரணமாகவும் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள நிதி சிக்கல்களுக்கு தீர்வு காண உதவுமாறு கோரிக்கை விடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தது.
அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (24) இது தொடர்பான கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான தினம் இன்னும் அறிவிக்கப்படாமையின் காரணமாக , ஏற்கனவே திகதியைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியானதாகவே காணப்படுகிறது.
எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடி, தேர்தலை நடத்துவதற்கான தினம் குறித்து தீர்மானிக்கவுள்ளது. அவ்வாறு தேர்தலை நடத்துவதற்கான தினம் தீர்மானிக்கப்பட்டு அது வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும்.
இது தொடர்பில் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுடனும் கலந்துரையாடி , அவர்களால் 25 மாவட்டங்களுக்குமான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றார்.