யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை உட்பட பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலைவார நிகழ்வுகளின் போது, மூன்றாம் வருட மாணவர்களால், இரண்டாம் வருட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சுதந்திரமான – முறை சார்ந்த விசாரணையை மேற்கொள்வதற்கு ஏதுவாக நான்கு பேருக்கும் உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் அறிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர் வதிவிடம், ஒழுக்கம் தொடர்பான விதிமுறைகளுக்கு அமையக் கடந்த 23 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை விடுதி உட்பட பல்கலைக்கழக வளாகத்தினுள் பிரவேசிப்பதற்கும், கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், பல்கலைக்கழகம் தொடர்புபட்ட எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கலைப்பீடாதிபதியின் உள்நுழைவுத் தடைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கலைவார நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மூன்றாம் வருட மாணவர்களுக்கும், இரண்டாம் வருட மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றி, கடந்த 23 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் கலகலப்பாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தின் போது தலை மற்றும் தோள் பட்டைப் பகுதியில் உபாதைக்குள்ளான இரண்டாம் வருட மாணவன் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
சம்பவம் தொடர்பில், பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் நான்கு மாணவர்களுக்கும் சம்பந்தமிருப்பதாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், பல்கலைக்கழக மாணவர் வதிவிடம், ஒழுக்கம் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு அமைவாகக் கலைப் பீடாதிபதியினால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.