போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும் உக்ரைனும் விரைவாக பேச்சு நடத்த வேண்டும்: சீனா

95 0

போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும், உக்ரைனும் விரைவாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும், அனைத்து நாடுகளும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.

உக்ரைனுக்குள் ரஷ்ய ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தத் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்திருப்பதை முன்னிட்டு, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக சீனா 12 அம்ச செயல் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: ”அனைத்து நாடுகளின் இறையாண்மை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். (NATO) கூட்டு ராணுவத்தை வலுப்படுத்துவதன் மூலமோ விரிவுபடுத்துவதன் மூலமோ ஒரு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்திவிட முடியாது.

மோதலோ போரோ ஒருவருக்கும் நன்மையை அளிக்காது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ரஷ்யாவும் உக்ரைனும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரே திசையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். இந்தப் பேச்சுவார்த்தைக்கு அனைத்து நாடுகளும் ஆதரவு அளிக்க வேண்டும். இதன்மூலம் படிப்படியாக பதற்றம் குறைந்து போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வழிவகைகளைக் காண வேண்டும்.

பேச்சுவார்த்தையும் விட்டுக் கொடுத்தலுமே உக்ரைன் பிரச்சினைக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு சீனாவின் உறுதியான ஆதரவு தொடரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சீனாவின் இந்த செயல்திட்டத்தை அமெரிக்கா விமர்சித்துள்ளது. ”உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவியதற்கு மேற்கத்திய நாடுகளும் நேட்டோ அமைப்புமே மறைமுக காரணம்; அவைதான் போரை தூண்டின என மேற்கத்திய நாடுகளுக்கும் நேட்டோவுக்கும் எதிராக கருத்துக்களைக் கூறி வந்த நாடு சீனா. இதன்மூலம், சீனா ஒரு சார்பான நிலைப்பாட்டை ஏற்கெனவே எடுத்துவிட்டது” என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து கூறி வரும் நிலையில், அந்த நிலைப்பாட்டுக்கு ஒத்த நிலைப்பாட்டை சீனா வெளிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.