பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் சூழலில் ஈரானும், சீனாவும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இலங்கையைத் தொடர்ந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கிறது. சென்ற மாத இறுதியில் பாகிஸ்தானில் பணவீக்கம் 24.5% ஆக உயர்ந்தது. வெளிச்சந்தையில் அத்தியாவசிய, உணவுப் பொருட்களின் விலை, முந்தைய மாதத்தை விட 30% முதல் 50% வரை அதிகரித்தது. தற்போது பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பால் விலை 250 ரூபாய்க்கும், இறைச்சி 750 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. இதனால், சாமானியர்களின் அன்றாட வாழ்க்கை சவாலாக மாறி வருகிறது.
இந்தச் சூழலில்தான் பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமத் அசிப், “பாகிஸ்தான் ஏற்கெனவே திவாலாகிவிட்டது. இதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் உட்பட அனைவரும் பொறுப்பு. திவாலான நாட்டில்தான் நாம் வாழ்கிறோம். நமது பிரச்சினைகளுக்கான தீர்வு நமது நாட்டிலேயே உள்ளது. பாகிஸ்தானின் பிரச்சினைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் தீர்வு இல்லை” என்று பகிரங்கமாக கடந்த வாரம் தெரிவித்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு ஈரானும், சீனாவும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. ஒருபக்கம் பாகிஸ்தானுடன் ஈரான் வர்த்தகத்தை மேம்படுத்தி வருகிறது. கடந்த 10 மாதங்களில், இருதரப்பு வர்த்தகத்தின் அளவு 2 பில்லியன் டாலர்களாக எட்டியுள்ளன என்றும், இந்த இலக்கு 5 பில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.மறுபக்கம் பாகிஸ்தானுக்கு சுமார் 700 மில்லியன் டாலர் கடனை சீனா வழங்கி இருக்கிறது. சீனாவிடம்தான் பாகிஸ்தான் அதன் நெருக்கடி காலத்தில் அதிக அளவு கடன் உதவியை பெற்றுள்ளது. இந்த வாரம் இறுதிக்குள் பாகிஸ்தானுக்கு சீனா அளித்த கடன் வந்து சேரும் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.