சென்னையில் பிப்.28-ல் நடக்கும் விசிக ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு: திருமாவளவன் அறிவிப்பு

113 0

விசிக சார்பில் 28-ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு முயலும் சனாதன சக்திகளைக் கண்டித்து சென்னையில் பிப்.28-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என கடந்த 22-ம் தேதி கூடிய விசிக தலைமை நிர்வாகக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணிக் கட்சித்தலைவர்கள் உள்ளிட்டோரை பங்கேற்கஅழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது: மக்கள் விரோத பாஜக உள்ளிட்ட அமைப்புகளைக் கண்டித்து பிப்-28-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் பி.அப்துல் சமது, மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.