தமிழகத்தில் உள்ள சிறைகளுக்கு கனரக சலவை இயந்திரங்கள் வழங்கப்பட்டதற்காக, முதல்வர் ஸ்டாலினை மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மற்றொரு முன்மாதிரி நடவடிக்கையாக, உங்கள் அரசின்சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, சிறைவாசிகளுக்கு, குறிப்பாக பெண் கைதிகளுக்கு உதவும் வகையில் சிறைச்சாலைகளில் கனரக சலவை இயந்திரங்கள் வழங்கியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
தென்னாப்பிரிக்காவில் கடந்த 1913-ம் ஆண்டின் பிற்பகுதியில், சத்தியாகிரகத்தின்போது மாபெரும் பேரணியில் பங்கேற்றதற்காக, தில்லையாடி வள்ளியம்மை, கஸ்தூரிபா மோகன்தாஸ் காந்திஆகியோர் மாரிட்ஸ்பர்க் சிறையில் 3 மாதங்கள் கடும் சிறை தண்டனை அனுபவித்தனர்.
‘தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம்’ என்ற நூலில் காந்திஜி, ‘அப்பெண்களுக்கு சிறையில் வழங்கப்பட்ட உணவு மிகவும் தரமற்றதாக இருந்தது. சிறையில் அவர்களுக்கு சலவை செய்யும் வேலைவழங்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த பெண்கள் இருவரும் கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்துபழகியவர்கள் என்றாலும், கடுமையான வேலை இருவருக்கும் சோதனையாக இருந்ததோடு, அவர்களது ஆரோக்கியத்தையும் பாதித்தது. அதன்பிறகு, 1914-ம் ஆண்டுபிப்.22-ம் தேதி தில்லையாடி வள்ளியம்மை காய்ச்சல் காரணமாக மரணமடைந்தார்.
கஸ்தூரிபா சிறையில் இருந்து விடுதலையானபோது, உடல்மெலிந்து காணப்பட்டார். 30 ஆண்டுகளுக்கு பின், அதாவது 1944-ம் ஆண்டு அதே பிப்.22-ம் தேதி ஆகாகான் அரண்மனை சிறையில் உயிரிழந்தார்.
சிறைச்சாலைகளுக்கு தாங்கள் கனரக சலவை இயந்திரங்கள் வழங்கியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தாங்கள் மேற்கொண்டமிகச்சிறந்த இந்த சீர்திருத்த நிகழ்வை, அதே தேதியில் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
இனி சலவை இயந்திரங்கள் பயன்பாடு நமது மாநிலத்தில் உள்ள அனைத்து சீர்திருத்த இல்லங்களிலும் நிலையான நடைமுறையாக இடம்பெறும் என்று நம்புகிறேன். தமிழகம் தொடர்ந்து சிறை சீர்திருத்தங்களை முன்னெடுத்து, அந்த துறையில், குறிப்பாக பெண் கைதிகளுக்கு உதவும் வகையில் முன்மாதிரியாக திகழட்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.