வழமைக்கு மாறான விதத்தில் கடந்த வாரம் நேபாளம் சிஐஏயின் இயக்குநர் வில்லியம் பேர்ன்ஸ் தனது நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுத்துள்ளது.
வில்லியம் பேர்ன்சின் விஜயம் இடம்பெறுவதற்கு உகந்த சூழ்நிலையில்லை என தெரிவித்தே நேபாளம் அவருக்கு அனுமதி மறுத்துள்ளது.
நேபாளத்தில் தேர்தல் இடம்பெறவுள்ளமை உட்பட அரசியல் சூழ்நிலைகளை காரணம் காட்டி சிஐஏயின் இயக்குநருக்கு அனுமதியளிக்க முடியாது என நேபாளத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் நேபாள அரசாங்கம் தெரிவித்ததை தொடர்ந்து வில்லியம் பேர்ன்ஸ் இலங்கையிலிருந்து அமெரிக்கா திரும்பினார் என அறிய முடிகின்றது.
நேபாள பிரதமர் புஸ்ப கமல் டாகல பிரசந்தா தனது அமைச்சரவை சகாக்களுடன் இந்த விஜயம் குறித்து கலந்தாலோசனை செய்த பின்னர் அமெரிக்க தூதரகத்திற்கு நேபாள அரசாங்கம் தனது முடிவை தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 18 ம் திகதி இலங்கையிலிருந்து விசேட சி7 குளோப்மாஸ்டர் விமானத்தில் தனது அதிகாரிகளுடன் வில்லியம் பேர்ன்ஸ் நேபாளத்திற்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தார்-18 மணிநேரம் காத்மண்டுவில் தங்கியிருப்பதற்கும் அவர் திட்டமிட்டிருந்தார்.
இந்த விமானத்துடன் வேறு இரண்டு விமானங்களும் நேபாளத்திற்கு செல்வதற்கான திட்டம் காணப்பட்டது.
இந்த விமானங்களில் சில வாகனங்கள் மற்றும் குறிப்பிடப்படாத உபகரணங்கள் போன்றவற்றை எடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து நேபாள அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியா சீனா போன்ற அயல்நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் தலைவர்கள் நேபாளத்திற்கு விஜயம் மேற்கொள்வது வழமையான விடயமில்லை.
2020ஓக்டோபர் மாதம் இந்தியாவின் ரோ அமைப்பின் தலைவர் சமன்ட் கோல் நேபாளத்தின் அப்போதைய பிரதமர் கேபிஒலியை சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்த விபரங்கள் வெளியாகவில்லை – ஒலியின் எதிர்ப்பாளர்கள் அவருக்கு எதிரான அரசியல் பிரச்சாரத்திற்கு இந்த சந்திப்பை தற்போதும் பயன்படுத்துகின்றனர்.
எனினும் பேர்ன்ஸ் போன்ற ஒருவரின் விஜயத்தை தடுத்திருப்பது பெரும் தவறு என நேபாளத்தின் பாதுகாப்பு ஆய்வாளர் கேசவ் பிரசாத் பட்டாராய் கருதுகின்றார்.
அமெரிக்காவின் உயர்மட்ட விஜயங்கள் தற்போது வழமையான விடயமாகிவிட்டன,ஆனால் அவை சீனாவி;ல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
நேபாளத்தில் அமெரிக்காவின் அதிகரித்த நடவடிக்கைகள் சீனாவை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் ஸ்திரமிழக்கச்செய்தல் நடவடிக்கையின் ஒரு பகுதி என சீனா தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நேபாளம் அமெரிக்காவின் எம்சிசி உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டதை சீனா கடுமையாக விமர்சித்து வருகின்றது.
தனது இந்தோ பசுபிக் மூலோபாயத்தில் நேபாளம் பங்களி;ப்பு வழங்கவேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது.
அது ஒரு அபிவிருத்தி திட்டம் என்பதாலேயே நேபாளம் அதனை அங்கீகரித்தது நாங்கள் அவர்கள் ஆயுதங்களுடன் வருவதற்கு அனுமதிக்கவில்லை என நேபாள பிரதமர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
The Indian Express (P) Ltd