திறைசேரியினால் நிதி விடுவிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்தி வைப்பதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கமைய தேர்தலை நடத்துவதற்கான தினத்தை மார்ச் 3ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்தோடு தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொள்ள தலையீடு செய்யுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதற்கும் தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேர்தலைக் காலம் தாழ்த்துமாறு கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனை எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நேற்று வியாழக்கிழமை உயர் நீதிமன்றம் அறிவித்தது.
இதற்கு முன்னர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே தேர்தல் குறித்த ஸ்திரமான தீர்மானம் எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை இது தொடர்பில் தீர்மானிப்பதற்காக முற்பகல் 10.30 மணியளவில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மார்ச் 9ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசியலமைப்பு ரீதியில் முன்னெடுத்த செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையுடன் தேர்தலுக்கு தேவையான திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு தலையீடு செய்யுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
தேர்தல் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் எழுந்துள்ள பல்வேறு காரணிகளால் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அன்றைய தினத்தில் இடம்பெறாது என்பதுடன் , தேர்தல் இடம்பெறும் தினத்தை மார்ச் 3ஆம் திகதி மீண்டும் அறிவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.