நாட்டின் சகல பிரஜைகளும் சமமாக நடத்தப்படும் சகாப்தம் உருவாக்கப்படும்-சஜித்

103 0

இன்று பலர் மனித உரிமைகள் பற்றி பேசினாலும் அதை சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்குள் மட்டுமே பேசுகிறார்கள் எனவும், ஆனால் அதில் பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், கல்வி மற்றும் சுகாதார உரிமைகள் இதில் அடங்கியிருக்க வேண்டும் எனவும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒரு மனித உரிமையுடன் மாத்திரம் மட்டுப்படாமல் சகல மனித உரிமைகளையும் பலப்படுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், ஒரு இனம் ஒரு மதம் பிரதானமாக இருக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் சகல இனங்களையும் மதங்களையும் முன்னிலைப்படுத்தும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், ஒரு தாய் தந்தையின் பிள்ளைகளாக நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு மீண்டும் புத்துயிரழிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வடக்கிலும் தெற்கிலும் பாரிய அபிவிருத்தி சகாப்தத்தை உருவாக்க ஒரு கட்சியாகவும் அரசியல் இயக்கமாகவும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், பொது மக்களின் வாழ்க்கையைப் பலப்படுத்துவதற்குத் தேவையான சகல பலத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தென்னிலங்கை மக்களின் அடிப்படை குறைபாடுகள் போலவே வடக்கு மக்களின் அடிப்படை குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்டு நாட்டின் சகல பிரஜைகளும் சமமாக நடத்தப்படும் சகாப்தம் உருவாக்கப்படும் எனவும், நாட்டின் குடிமக்கள் அரசாங்கத்தின் அடிமைகளாக அல்லாமல் சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சுதந்திரமான நாட்டில் திருப்தியாக வாழும் குடிமக்களை உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகின் ஏனைய நாடுகள் புதிய தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் போது, சமீபகாலமாக இனவாதத்தாலும், மதவாதத்தாலும் எமது நாடு பின்னோக்கி வருகின்ற போதும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அந்த இனவாத, மதவாத சிந்தனைகள் அனைத்தும் கைவிடப்பட்டு, நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு சகலரின் பங்கேற்பை பெற்றுக்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (24) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.