சந்தையில் வாகன உதிரிபாகங்களின் விலைகள் 300 சதவீதம் அளவில் மீண்டும் அதிகரித்துள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதானமாக மின்கலம், மின்குமிழ், கண்ணாடி, வாகன இலக்க தகடு மற்றும் இயந்திரம் உள்ளிட்ட பல உதிரிபாகங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக பஞ்சிகாவத்தை உதிரிபாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தையில் வாகன உதிரிபாகங்களுக்கான தட்டுப்பாடும் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் சில நிதி நிறுவனங்கள் கடன் பத்திரங்களை விநியோகிக்காமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன உதிரிபாகங்களை நாட்டுக்கு கொண்டு வரும் வர்த்தகர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அவ்வாறான பின்னணியில் அண்மையில், சுங்கத்தினால் நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வாகன உதிரிபாகங்கள் அழிக்கப்பட்டன.
அந்த உதிரி பாகங்கள் சந்தைக்கு விடப்பட்டால் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.