பிலிப்பைன்ஸ் எரிமலையொன்றுக்கு அருகில் சிறிய விமானம் வீழ்ந்த சம்பவத்தில் அவுஸ்திரேலியர்களான கார்த்தி சந்தானம், சைமன் சிப்பர்பீல்ட் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
தெற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் அடிலெய்ட் நகரைச் சேர்ந்த இவர்கள் இருவரும் பிலிப்பைன்ஸின் மணிலா நகரை தளமாக்க கொண்ட மின்சக்தி நிறுவனமொன்றில் தொழில்நுட்ப ஆலோசகர்களாக பணியாற்றி வந்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் கடந்த சனிக்கிழமை மாலை 6.43 மாலை பிலிப்பைன்ஸின் அல்பே நகரிலுள்ள பைகோல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, செஸ்னா ஆர்பிசி340 ரக விமானத்தில் மணிலா நகரை நோக்கி புறப்பட்டனர்.
பிலிப்பைன்ஸை சேர்ந்த விமானி ரூபினோ ஜேம்ஸ் கிறிசோஸ்டோமோ ஜூனியர் மற்றும் ஜோயல் மார்ட்டின் ஆகியோர் இவ்விமானத்தில் இருந்த ஏனைய இருவருர் ஆவர்.
இவ்விமானம் புறப்பட்டு 3 நிமிடங்களின் பின்னர் தொடர்பை இழந்தது. அதன்பின் அவ்விhனம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
பிலிப்பைன்ஸில் அதிக எரிமலைகள் உள்ள பகுதியொன்றில், மயோன் எரிமலைக்கு அருகில், சிறிய விமானமொன்று வீழ்ந்து கிடப்பது மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (19) கண்டுபிடிக்கப்பட்டது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக 34, வாகனங்கள், 11 ட்ரோன்கள், மோப்ப நாய்கள் சகிதம் 200 இற்கும் அதிகமானோர் ஈடுபட்டுத்தப்பட்டனர்.
தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிலிப்பைன்ஸ் இராணுவத்தினர் இருவர் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.