ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் மார்ச் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலைத் தடுப்பதற்கு திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
எதிர்காலத்தில் தேர்தலை பிற்போடபடுமாயின் அது மக்களின் வாக்குரிமைகளைப் பயன்படுத்துவதற்கான அடிப்படை ஜனநாயக உரிமையின் மீதான பெரும் தாக்குதலாகும்.
எனவே இவ்வாறான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம் என்று சோசலிச சமத்துவக் கட்சியின் செயலாளர் தீபால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பு, தேசிய நூலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
விக்கிரமசிங்கவின் ஆட்சியின் கீழ் செயல்படும் அரசாங்கத்தில் ஜனநாயகம் இருக்காது. அவர் தற்போது ஜனநாயக உரிமைகளை மீறும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இதனையே அடுத்த வருடமும் மீண்டும் செய்வார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் கீழ் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு தேவையான நிதியை வழங்க அரச திறைசேரி மறுத்துவிட்டது.
அத்தியாவசிய அரசாங்க செலவுகளுக்காக மாத்திரமே நிதி வழங்குமாறு கடந்த 8 ஆம் திகதி திறைச்சேரி செயலாளருக்கு மஹிந்த சிறிவர்தனவிற்கு உத்தரவிட்டார். அத்தியாவசிய செலவுகள் பட்டியலில் இருந்து உள்ளூராட்சி தேர்தல் அகற்றப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தேசிய அரசாங்கத்தை மாற்றாது என்றாலும், ஒரு தோல்வி மேலும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு இட்டுச்சென்று அதன் கடும் எதிர்ப்புக்குள்ளான பொருளாதார வேலைத்திட்டத்தை தடம் புரளச் செய்யும், சர்வதேச நாணய நிதியத்துடான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து கடன் உதவிகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அரசாங்கம் கவலை கொள்வதாக தொடர்ந்து கூறி வருகிறது.
இதனை நோக்கும் போது, விக்கிரமசிங்க மற்றும் பொதுஜன பெரமுன முன்னணி தலைமையிலான கூட்டணி எந்த ஒரு தேர்தலிலும் தோல்வியை சந்திக்கும் என்பதை புலப்படுத்துகிறது.ஆனால் ஜனாதிபதியின் பொருளாதார மீட்களில் அரச சொத்துக்களை தனியார் மயப்படுத்தல், வரிகளை அதிகரித்தல், ஊதியங்கள், சமூகத்திற்கு கிடைக்கவேண்டிய மானியங்களை இல்லாது செய்தல் என்பனவாகும்.
எவ்வாறாயினும், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க நாட்டில் எதிர் கட்சி, தேசிய மக்கள் சக்தி போன்ற முதலாளித்துவ கட்சிகளை ஒருபோதும் நம்ப கூடாது. இந்த கட்சிகளலாயே தொழிற்சங்கங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
அவை கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ஏற்பட்ட பாரிய வெகுஜன எழுச்சியை காட்டிக்கொடுத்து மில்லியன் கணக்கானவர்கள் பங்கேற்ற போராட்டத்தின் பயனை இல்லாது செய்து, அதன் மூலம் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு ஓடிய பின்னர் ஜனநாயக விரோதமான முறையில் விக்கரமசிங்க நியமிக்கப்படுவதற்கு கதவைத் திறந்து விட்டனர். இதுபோன்ற முதலாளித்துவ வர்க்கத்திற்குள் தொழிலாளர்களுக்கு தீர்வு கிடைக்க போவதில்லை என்றார்.