அரசியல் அமைப்பை ஜனாதிபதி துஷ்பிரயோகம் செய்கிறார்!

91 0

சுயாதீன ஆணைக்குழுக்கள், அரச திணைக்களங்கள் மற்றும் அரச அதிகாரிகள் என அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, முழு அரசியல் அமைப்பையும் ஜனநாயகத்துக்கு எதிராக ஜனாதிபதி துஷ்பிரயோகம் செய்கின்றார் என எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான ஜனாதிபதியின் கட்டளை   மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சுயாதீன ஆணைக்குழுக்கள், அரச திணைக்களங்கள் மற்றும் அரச அதிகாரிகள் என அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, முழு அரசியல் அமைப்பையும் ஜனநாயகத்துக்கு எதிராக ஜனாதிபதி துஷ்பிரயோகம் செய்கின்றார்.

ஜனாதிபதி ரணில் பிரதமராக இருந்த வேளையில், தேர்தல் முறையில் மாற்றம் தேவை எனத் தெரிவித்து மாகாண சபை முறைமையையே இல்லாதொழிக்க திட்டம் தீட்டினார். தற்போதும், அதுபோன்ற ஒரு முறைமையை முன்னெடுத்து தேர்தலை நடத்தாமல் இருக்க முயற்சிக்கின்றார்.

மாகாணசபைகள் இல்லை, உள்ளூராட்சி சபைத்  தேர்தலும் இல்லை இந்த பாராளுமன்றமும் ஜனாதிபதியின் கையிலே ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. இதற்கு அவர் பின்னால் இருக்கும் மக்களால் தெரிவான .எம்.பி.க்கள்  கைத்தட்டி ஆதரவளித்து ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்க உதவுகின்றனர்

அத்துடன், மின் கட்டண அதிகரிப்பானது முதலில் மலையக மக்களையே பாதித்துள்ளது. இதனால் அவர்கள் நிரந்தரமாக இருளிலே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முழு நாடே மின்கட்டணம் செலுத்த அல்லலுறும் இந்த வேளையில் மலையக மக்கள் எவ்வாறு அதனை செலுத்துவார்கள்?  ஆனால், நடப்பு அரசாங்கத்துடன் இருக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் இதுபற்றி ஒரு போதும் பேசப்போவதில்லை அவர்களுக்கு மக்களின் வலிகள் புரியாது  என்றார்.