அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் வருகை தொடர்பில் அச்சம் கொள்வது அவசியமற்றது

110 0

அமெரிக்க முதனிலை பாதுகாப்பு அதிகாரிகளுக்கும்,பாதுகாப்பு தரப்பிற்கும் இடையில் இடம்பெற்ற பாதுகாப்பு சார் பேச்சுவார்த்தை விடயங்களை பகிரங்கப்படுத்த முடியாது.

பொருளாதார மீட்சிக்காக நாட்டை அடகு வைக்கமாட்டோம்,ஆகவே அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் வருகை தொடர்பில் அச்சம் கொள்வது அவசியமற்றது என வெளிவிவகாரத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற  அமெரிக்க பாதுகாப்பு முதனிலை  பாதுகாப்பு அதிகாரிகளின் விஜயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார முன்வைத்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டுக்கு அண்மையில் வருகை  தந்த  அமெரிக்காவின் முதனிலை பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பில் அரசியல் மட்டத்தில் பல சோடிக்கப்பட்ட  விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன.

அதில் பல விடயங்கள் முற்றிலும் பொய்யானது.22 பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்கு வருகை தந்ததும்,அவர்களுக்கு விசேட பாதுகாப்பு  வழங்கப்பட்டதும் உண்மை ஆனால் இலங்கையின் குடிவரவு மற்றும் குடி அகழ்வு சட்டத்திற்கு முரணாக அவர்கள் நாட்டுக்கு வருகை தந்தார்கள் என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.

அமெரிக்காவின் முதனிலை பாதுகாப்பு அதிகாரிகள் வெளிவிவகாரத்துறை அமைச்சின் அழைப்புக்கு அமைய நாட்டுக்கு வருகை தரவில்லை அவர்கள் தேசிய பாதுகாப்பு தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட நாட்டுக்கு வருகை தந்தார்கள்,ஆகவே பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை பகிரங்கப்படுத்த முடியாது..

நாடு: பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பையும் தற்போது எதிர்பார்த்துள்ளோம்.

சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்ற காரணததினால் இந்நாடுகளுடன் தொடர்பு கொள்வதை சந்தேக பார்வையில் பார்க்க முடியாது.இலங்கை அனைத்து நாடுகளுடன் இணக்கமாகவே செயற்படுகிறது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து  மீள்வதற்கு நாட்டை அடகு வைக்கப் போவதில்லை.அத்துடன் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு இடமளிக்கவும் போவதில்லை ஆகவே  அமெரிக்க முதனிலை பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பில் அச்சம் கொள்வது அவசியமற்றது என்றார்.