பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்ற மட்டத்தில் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ள நிலையில் அரசாங்கம் தனது பெரும்பான்மை அதிகாரத்தை கொண்டு முறையற்ற வகையில் செயற்படுகிறது.
அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவுக்கு ஆளும் தரப்பினர் எவ்வாறு எதிர்தரப்பின் உறுப்பினரை பரிந்துரை செய்ய முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (23) வியாழக்கிழமை இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியினர் எனது பெயரை நேற்று இடம்பெற்ற தெரிவுக்குழு கூட்டத்தின் போது பரிந்துரை செய்துள்ளார்கள்.
எதிர்க்கட்சியின் சார்பில் எனது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் ஆளும் தரப்பினர் எதிர்க்கட்சியின் பரிந்துரையாக எதிர்தரப்பின் உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்கள்.
எதிர்க்கட்சிக்குள் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் ஆளும் தரப்பினர் அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழு தலைவராக மயந்த திஸாநாயக்கவை நியமித்துள்ளனர்.
இதில் எமக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் ஏதும் இல்லை. இவ்விடயத்தில் அரசாங்கம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது. பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும். ஆனால், அனைவரும் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால், மறுபுறம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி முறையற்ற வகையில் செயற்படுகிறது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முழுமையான ஒத்துழைப்பினை வழங்க தயாராக உள்ளோம் என்றார்.