வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருளை கடத்துவோருக்கு உச்சபட்ச தண்டனை

96 0

இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடமுள்ள 3000 கிலோ கிராம் போதைப்பொருட்களை அழிப்பதற்கு புதிய சட்டம் மற்றும் வழிமுறை தயாரிக்கப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு போதைப்பொருட்களை கடத்துபவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் செயன்முறைகளை அதிகரிக்கும் நோக்கில் புனர்வாழ்வு பணியக சட்ட மூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நீதி அமைச்சில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களமானது அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும் வேகம் நூற்றுக்கு நூறு சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டின் பின்னர் உயர் தரத்துடன் கூடிய முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கும் திணைக்களமாகவும் இது காணப்படுகிறது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் நச்சுத்தன்மையுடைய போதைப்பொருள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் மூலம் 5 கிராமிற்கும் அதிக போதைப்பொருளை தம்வசம் வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்குவதற்கும் , 5 கிராமை விட குறைவான போதைப்பொருளை வைத்திருப்பவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை அழிப்பதற்கான புதிய சட்ட மூலம் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும்.

நீதி அமைச்சு, அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் , பொலிஸ் மற்றும் ஆபத்தான ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபை என்பன இணைந்து சட்ட பூர்வமான வழிமுறை குறித்து கலந்துரையாடி வருவதோடு , இதற்கு அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக் கொண்ட பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கமைய ஒரே சந்தர்ப்பத்தில் 1000 கிலோ கிராம் போதைப்பொருளை அழிப்பதற்கான பொறிமுறையை பொறுத்தமான இடத்தில் ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அழிப்பதற்கு 3000 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் காணப்படுகின்றன.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பெருமளவில் அதிகரித்துள்ளனர். அவர்கள் அனைவரையும் கைது செய்ய முடியாது.

குறிப்பாக மீன்பிடி படகுகள் மூலம் தெற்கு மற்றும் வடக்கு கடற்பரப்பில் இருந்து போதைப்பொருட்களை நாட்டிற்கு கொண்டு வருகின்றனர். கடற்படை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் இதனைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வரும் சர்வதேச கடத்தல்காரர்கள் கைது செய்யப்படுவதோடு, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் முறைமை தயாரிக்கப்படும் என்றார்.