அரச தொழிற்சங்கங்கள் பயங்கரவாத குழுக்களை போல் செயற்படுவதை தடுப்பதற்காகவே முக்கிய துறைகள் அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன.
இலங்கை மின்சார சபையின் சேவையாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்காக மின்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.
மின்னுற்பத்திக்கான செலவை முகாமைத்துவம் செய்வதற்காகவே மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் கட்டளை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரச சேவைகளை முடக்குவதற்காக அரச சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
தொழிற்சங்கங்கள் என குறிப்பிட்டுக் கொண்டு பயங்கரவாத குழுக்களை போல் செயற்படும் தொழிற்சங்கங்களிடமிருந்து நாட்டு மக்களுக்கான சேவைகளை பாதுகாப்பதற்காக அரச சேவை அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன.
அரச தொழிற்சங்கங்கள் தீவிரவாத குழுக்களை போல் செயற்படுவதால் அத்தியாவசிய சேவைகளை பாராளுமன்றத்தின் அனுமதியுடன் சட்டமாக்குவதற்கு அவதானம் செலுததப்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளுக்கு பாராளுமன்ற அனுமதி வழங்க கூடாது என எதிர்தரப்பினர் குறிப்பிடுவார்களாயின் இவர்கள் தொடர்பில் நாட்டு மக்கள் அவதானம் செலுத்த வேண்டும்.
தேர்தல் செயற்பாடுகளுக்கு தேவையான எரிபொருளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவிக்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
நாளை எரிபொருள் வேண்டும் என இன்று விண்ணப்பம் முன்வைத்தால் எம்மால் எரிபொருள் விநியோகிக்க முடியாது.
எரிபொருள் வேண்டுமாயின் உரிய தரப்பினர் மூன்று மாத காலத்திற்கு முன்னர் விண்ணப்பங்களை முன்வைக்க வேண்டும்.
மின்கட்டணத்தை அதிகரித்ததன் பின்னர் மின்விநியோக துண்டிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் குறிப்பிடுகிறார்கள்,மின்கட்டணத்தை அதிகரிக்குமாறு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கோரிக்கை விடுத்தோம்.கடந்த ஆகஸ்ட் மாதம் போதுமான அளவு மின்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.
24மணித்தியாலங்களும் மின்சாரத்தை விநியோகிக்க வேண்டுமாயின் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என று முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மின்கட்டணம் 66 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டண உயர்வு தொடர்பில் போர் கொடி உயர்த்துபவர்கள்,மின்துண்டிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அவதானம் செலுத்தவில்லை.
மின்கட்டணம் அதிகரித்ததை தொடர்ந்து வங்கி கட்டமைப்புக்கு இலங்கை மின்சார சபையின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் வங்கிகள் கடன் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன.ஆகவே எதிர்வரும் காலங்களில் மின்விநியோக கட்டமைப்ப மறுசீரமைக்கப்படும்.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான அறிக்கை எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.
மறுசீரமைப்பின் போது சேவையாளர்களின் பல வரபிரசாதங்கள் துண்டிக்கப்படும்.இதனால் தான் இவர்கள் தற்போது போராட்;டத்தில் ஈடுபடுகிறார்கள்.
இலங்கை மின்சார சபை சேவையாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு மின்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை, மின்னுற்பத்திக்கு தேவையான நிதியை முகாமைத்துவம் செய்வதற்காகவே மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நிர்வாகத்தில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்றார்.