தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்வரும் 27ஆம் திகதி விசேட வைத்தியர்கள் ஐவரடங்கிய குழுவொன்றை தமது நீதிமன்றம் நியமிக்கும் என கொழும்பு மேலதிக நீதிவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்.
மரணம் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு சட்ட வைத்தியரின் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் சமர்பிக்கப்பட்டுள்ள ஏனைய அறிக்கைகளின்படி மரணம் இடம்பெற்ற விதம் சந்தேகத்திற்குரியது எனவும் மேலதிக நீதிவான் மேலும் தெரிவித்தார்.
எதிர்கால பிரேத பரிசோதனை நடவடிக்கைகளை மிகவும் வெளிப்படையான முறையில் மேற்கொள்வதே தனது நீதிமன்றத்தின் நோக்கமாகும் என்றும் மேலதிக நீதிவான் கூறினார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தினத்தில் வழங்கப்பட்ட வைத்திய சிகிச்சை, நோயாளியின் படுக்கை இலக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளர்.